இணைய விசாரணையின்போது பெண்ணிடம் அத்துமீறிய வழக்கறிஞர்; அதிரடி காட்டிய நீதிமன்றம்

இம்மாதிரியான வெட்கக்கேடான அநாகரீக செயல் பொதுவெளியில் நிகழும்போது, அதை பார்த்து கொண்டு அமைதியாக இருக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இணையம் வழியாக நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர் பெண்ணிடம் முறையற்று நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அவரை இடைநீக்கம் செய்துள்ளது. ஒரு நீதிபதி கொண்ட அமர்வின் முன்பு நடைபெற்ற விசாரணையின்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

குற்றம்சாட்டப்பட்டுள்ள சந்தான கிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவர் அனைத்து நீதிமன்றங்கள், தீர்பாயங்கள் போன்ற நிறுவனங்களில் தன்னுடைய பெயரிலோ அல்லது வேறு பெயரிலேயோ இனி பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. முறையற்ற நடத்தை குறித்த குற்றச்சாட்டில் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் முடியும் வரை இந்த தடை தொடரும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆர். ஹேமலதா ஆகியோர், தானாக முன்வந்து 
சந்தான கிருஷ்ணனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து முழுமையான விசாரணை மேற்கொள்ள சிபி-சிஐடிக்கு உத்தரவு பிறப்பித்துள்னர். அதுமட்டுமின்றி, டிசம்பர் 23ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறித்தியுள்ளனர்.

அதேபோல், வழக்கறிஞருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளனர். அந்தவகையில், வழக்கறிஞராக பணியாற்ற அவருக்கு தடை விதிக்கும் விதமாக பார் கவுன்சில் இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. திங்கள்கிழமையன்று, இணையம் வழியாக விசாரணை நடைபெற்றபோது பெண்ணுடன் வழக்கறிஞர் முறையற்று இருந்தது போன்ற விடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதை கண்டித்துள்ள நீதிமன்றம், "இம்மாதிரியான வெட்கக்கேடான அநாகரீக செயல் பொதுவெளியில் நிகழும்போது, அதை பார்த்து கொண்டு அமைதியாக இருக்க முடியாது" என தெரிவித்தது. மேலும், சமூகவலை தளத்தில் இந்த விடியோ பகிரப்படுவதை தடுக்க நகர காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com