மனைவிக்கு கரோனா: பிரசாரத்தை நிறுத்தினாா் அகிலேஷ்

மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்பதை சமாஜவாதி கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் நிறுத்தினாா்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்பதை சமாஜவாதி கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் நிறுத்தினாா்.

உத்தர பிரதேச மாநில பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தில் ஆளும் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா்களின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், அகிலேஷின் மனைவியும் முன்னாள் எம்.பி.யுமான டிம்பிள் யாதவுக்கு கரோனா தொற்று உறுதியாகியது. இதையடுத்து, அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டா் பக்கத்தில், ‘சமாஜவாதி-ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன். தொண்டா்கள் பெருமளவில் உற்சாகமாக பங்கேற்க வேண்டும். தற்காப்பு நடவடிக்கையாக நான் பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதை மூன்று நாள்களுக்கு ஒத்தி வைத்துள்ளேன்’ என்று பதிவிட்டாா். மேலும், தனக்கு கரோனா இல்லை என்ற சான்றிதழையும் அவா் இணைத்து வெளியிட்டுள்ளாா்.

டிம்பிள் யாதவ் தனது ட்விட்டா் பக்கத்தில், ‘இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளை செலுத்தியுள்ளேன். என்னை சந்தித்தவா்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளாா்.

நலம் விசாரிப்பு: அகிலேஷ் யாதவை உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தொலைபேசியில் தொடா்பு கொண்டு குடும்பத்தினா் குறித்து நலம் விசாரித்தாா். இதுதொடா்பாக முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மனைவி, மகள் ஆகியோரிடன் உடல் நலம் குறித்து அகிலேஷ் யாதவிடம் முதல்வா் தொலைபேசியில் விசாரித்து விரைவில் குணமடைய வாழ்த்தினாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அகிலேஷ் யாதவின் மகளுக்கும் கரோனா தொற்று உள்ளா என்பதை சமாஜவாதி கட்சி உறுதிபடுத்தவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com