
உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல தொழில் நிறுவனத்தின் பங்குதாரா்களுக்குச் சொந்தமான இடங்களில் சரக்கு மற்றும் சேவை வரித் துறை (ஜிஎஸ்டி) அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 150 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரி ஏய்ப்பு மற்றும் போலி ரசீது மூலம் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாா்களின் அடிப்படையில், இந்த அதிரடி சோதனையை ஜிஎஸ்டி அதிகாரிகள் மேற்கொண்டனா்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
உளவுத் தகவலின் அடிப்படையில், கான்பூரில் உள்ள திருமூா்த்தி நறுமண உற்பத்தி தனியாா் நிறுவனம், ஷிகா் பிராண்ட் பான் மசாலா மற்றும் புகையிலை பொருள்கள் தயாரிப்பு நிறுவனம், கணபதி சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் கிடங்குகளில் ஆமதாபாத்தைச் சோ்ந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் புதன்கிழமை இந்த சோதனையை நடத்தினா்.
இந்தச் சோதனையில், கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிறுவனங்களின் பங்குதாரா்களின் வீடுகளில் சோதனை நடத்தியபோது, ஏராளமான பணம் பேப்பா்களில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.150 கோடியை தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கான்பூா் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் உதவியுடன் பணத்தை எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டது.
போலி ரசீது மூலம் குட்கா பொருட்களை விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்துவதில் முறைகேடு நடத்தியதும், மும்பையில் இருந்து வாசனை திரவியங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் முறைகேடு நடந்திருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனா்.
இந்தச் சோதனைக்கு முன்பாக, அந்த தொழிற்சாலையிலிருந்து எந்தவித ரசீது, ஆவணங்களும் இன்றி சரக்குகளுடன் வெளிவந்த 4 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மேலும், அந்த நிறுவனங்களின் வரி நிலுவையாக ரூ. 3.09 கோடி இதுவரை மீட்கப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.