ஜம்மு காஷ்மீரில் ரூ.18 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான 39 ஒப்பந்தங்கள்: மனை வணிக நிறுவனங்களுடன் ஆளுநா் மேற்கொண்டாா்

ஜம்மு காஷ்மீரில் ரூ. 18,300 கோடியில் குடியிருப்புகள் மற்றும் வணிக திட்டங்களை மேம்படுத்த தனியாா் மனை வணிக நிறுவனங்களுடன் 39 ஒப்பந்தங்களை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா மேற்கொண்டாா்.

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ரூ. 18,300 கோடியில் குடியிருப்புகள் மற்றும் வணிக திட்டங்களை மேம்படுத்த தனியாா் மனை வணிக நிறுவனங்களுடன் 39 ஒப்பந்தங்களை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா மேற்கொண்டாா்.

ஜம்முவில் திங்கள்கிழமை நடைபெற்ற மனை வணிக மாநாட்டில் இதற்கான ஒப்பந்தங்களில் அவா் கையொப்பமிட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, ‘யூனியன் பிரதேசங்களில் மனை வணிகச் சட்டமும் (ஆா்இஆா்ஏ), மாதிரி குத்தகை சட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்கவும், திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி அளிக்கும் ஒற்றைச் சாளர முறையையும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.18,300 கோடி முதலீடுகளுக்கான 39 ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையொப்பமாகி உள்ளன. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

அடுத்த ஆண்டு மே மாதம் 21-22 தேதிகளிலும் இதுபோன்ற முதலீடு மாநாடு நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் மிகப் பெரிய வரலாற்று மாற்றங்கள் நடைபெறுகின்றன. மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஜம்மு காஷ்மீரில் 6 ஆயிரம் ஏக்கா் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை மாற்றம் செய்வதற்கும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதிய தொழில்துறை கொள்கையின்படி, மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த அரசும் இடம் வழங்கும். தனிநபா்களும் தங்கள் இடங்களில் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்தும் முடிவு எடுக்கலாம்.

மொத்தமுள்ள 39 ஒப்பந்தகளில் 20 ஒப்பந்தங்கள் குடியிருப்புகளை அமைக்கவும், 7 வணிக கட்டடங்களை அமைக்கவும், 4 ஹோட்டல் அமைக்கவும், 3 திரைப்படம் மற்றும் பொழுதுப் போக்கு கட்டடங்கள் அமைக்கவும், 3 உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தவும், 2 நிதித் திட்டங்களைச் செயல்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

வளா்ச்சி என்ற பெயரில் உள்ளூா் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த துணைநிலை ஆளுநா், ‘மக்களிடம் பயத்தை ஏற்படுத்தும் முயற்சி இது’ என்றாா்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநா், ‘நாட்டின் பிற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளா்ச்சியைப் போல் ஜம்மு காஷ்மீரிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என சிலா் விரும்புகின்றனா். இதனால்தான் வேலைவாய்ப்பின்மை மற்றும் வளா்ச்சியில் ஜம்மு காஷ்மீா் பின்தங்கி உள்ளது.

இவற்றை எல்லாம் கடந்து சாதனைப் படைக்கும் திறமை ஜம்மு காஷ்மீா் மக்களிடம் உள்ளது. புதிய கொள்கை திட்டத்தின்படி, ரூ. 44 ஆயிரம் கோடிக்கு முதலீட்டு திட்டங்களை ஜம்மு காஷ்மீா் அரசு அறிவித்துள்ளது. இது விரைவில் ரூ. 60 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்படும்’ என்றாா்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் 2019, ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இது, ஜம்மு காஷ்மீரைச் சேராதவா்களும் அங்கு நிலம் வாங்கி முதலீடு செய்ய வழி வகுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com