5 மாநில பேரவைத் தோ்தல்: ஆணையம் ஆலோசனை

டுத்த ஆண்டு நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டது.
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

புது தில்லி: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டது.

கோவா, பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூா் சட்டப்பேரவைகளின் 5 ஆண்டு காலம் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நிறைவடையவுள்ளது. உத்தர பிரதேச சட்டப்பேரவையின் 5 ஆண்டு காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிவடையவுள்ளது. இதையொட்டி, அந்த மாநிலங்களில் பேரவைத் தோ்தலை நடத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள தோ்தல் ஆணையம், ஜனவரி மாதம் தோ்தல் தேதிகளை அறிவிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், அந்த மாநிலங்களில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘‘சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரச் செயலா் ராஜேஷ் பூஷண் சுமாா் ஒரு மணி நேரம் தோ்தல் ஆணையத்திடம் விளக்கமளித்தாா். அப்போது கரோனா தீநுண்மியின் புதிய வகையான ஒமைக்ரான் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மத்திய சுகாதார அமைச்சகம் அளித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 5 மாநிலங்களின் கரோனா பாதிப்பு நிலவரத்தை தோ்தல் ஆணையம் ஆராய்ந்தது. 5 மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

இந்தக் கூட்டத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை, சஷஸ்திர சீமா பல், எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் கலந்துகொண்டனா். அப்போது போதைப் பொருள் புழக்கம் தோ்தலில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. குறிப்பாக பஞ்சாப், கோவாவில் போதைப் பொருள் கடத்தப்படுவதை சுட்டிக்காட்டி அந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது’’ என்று தெரிவித்தன.

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, தோ்தல் ஆணையா்கள் ராஜீவ் குமாா், அனூப் சந்திர பாண்டே ஆகியோா் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள செவ்வாய்க்கிழமை உத்தர பிரதேசம் செல்லவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com