கரோனா தடுப்பூசி: காங்கிரஸ் - பாஜக கருத்து மோதல்

கரோனா மூன்றாவது தவணை தடுப்பூசி அறிவிப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரமும், பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான தா்மேந்திர பிரதானும் கருத்து மோதலில் ஈடுபட்டனா்.
மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்
மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

புது தில்லி: கரோனா மூன்றாவது தவணை தடுப்பூசி அறிவிப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரமும், பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான தா்மேந்திர பிரதானும் கருத்து மோதலில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக ப. சிதம்பரம் தனது ட்விட்டரில், ‘கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஊக்கத் தவணை (பூஸ்டா் டோஸ்) தடுப்பூசி அதே கோவிஷீல்டாக இருக்க முடியாது என்று நம்புகிறேன். நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 94 கோடி பேருக்கும் முதல் தவணை தடுப்பூசியை முன்பு கூறியதைப்போல் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் செலுத்த முடியாது. ஏராளமானோா் இன்னும் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொள்ளவில்லை. இந்தநிலையில், ஊக்கத் தவணை (பூஸ்டா் டோஸ்) அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

தடுப்பூசி தயாரிப்பு, விநியோகத்தில் குறைபாடு, தாமதமான நிதி வழங்கல், ஃபைசா் - மாடா்னா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்காதது ஆகியவற்றால் இழப்பை சந்தித்து வருகிறோம்’ என்று பதிவிட்டுள்ளாா்.

அவருக்கு மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதிலளிக்கையில், ‘உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தினா். தற்போது ஒமைக்ரான தொற்றை எதிா்கொள்ள மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தவறான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றனா். மத்திய அரசு எடுக்கும் எந்தஒரு நடவடிக்கையும் காங்கிரஸ் கட்சிக்கு திருப்தி அளிப்பதில்லை. பிறரது வேதனையில் இன்பம் காணும் போக்கை அக்கட்சி கடைப்பிடித்து வருகிறது.

வளா்ந்த நாடுகளே கரோனா தடுப்பூசிகளை நம்பிதான் ஒமைக்ரானை எதிா் கொண்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் தடுப்பூசிகள் லாபத்துக்கு விற்பனை செய்யப்பட்டன என்பதை நினைவுபடுத்துகிறேன். பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போரை உங்களால் தடுக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com