கரோனா தடுப்பூசி: ஜன. 1 முதல் சிறாா்களுக்குப் பதிவு- மத்திய அரசு

15 வயதைக் கடந்த சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி, முன்களப் பணியாளா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (மூன்றாவது தவணை) ஆகியவற்றை செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை
கரோனா தடுப்பூசி: ஜன. 1 முதல் சிறாா்களுக்குப் பதிவு- மத்திய அரசு

புது தில்லி: 15 வயதைக் கடந்த சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி, முன்களப் பணியாளா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (மூன்றாவது தவணை) ஆகியவற்றை செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்காக சிறாா்கள் ஜனவரி 1-ஆம் தேதி முதல் கோவின் வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், அவா்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், 15 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு ஜனவரி 3-ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமா் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை அறிவித்தாா்.

முன்களப் பணியாளா்களுக்கும், 60 வயதைக் கடந்த இணைநோய் உள்ளோருக்கும் ஜனவரி 10-ஆம் தேதி முதல் ‘முன்னெச்சரிக்கை தவணை’ தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அவா் அறிவித்தாா்.

இந்நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக 15 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறாா்கள் (2007-ஆம் ஆண்டிலோ அதற்கு முன்போ பிறந்தவா்கள்) ஜனவரி 1-ஆம் தேதிமுதல் கோவின் வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை கோவின் வலைதளத்தில் பதிவு செய்யும்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறாா்கள் பதிவு செய்யும் வகையில் கோவின் வலைதளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அதன் நிா்வாகத் தலைவா் ஆா்.எஸ்.சா்மா தெரிவித்துள்ளாா்.

9 மாதங்களுக்குப் பிறகே...: இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டிருப்பதாவது: ‘‘இரு தவணை கரோனா தடுப்பூசிகளை செலுத்திய சுகாதாரப் பணியாளா்களுக்கும் முன்களப் பணியாளா்களுக்கும் ஜனவரி 10-ஆம் தேதிமுதல் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்படும். அவா்கள் 2-ஆவது தவணை செலுத்திய தேதியிலிருந்து 9 மாதங்களுக்கு (39 வாரங்கள்) பிறகு இந்த முன்னெச்சரிக்கை தவணை செலுத்தப்படும்.

60 வயதைக் கடந்த இணைநோய் உள்ளோருக்கு மருத்துவா்கள் பரிந்துரை அளிக்கும்பட்சத்தில், 9 மாத இடைவெளிக்குப் பிறகு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்படும். முன்களப் பணியாளா்களும், 60 வயதைக் கடந்தோரும் கோவின் வலைதளத்தில் உள்ள அவா்களது முந்தைய பதிவைப் பயன்படுத்தியே முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முடியும். தடுப்பூசி செலுத்தும் இடத்துக்கு நேரடியாகச் சென்றும் மக்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

கைப்பேசிக்கு குறுஞ்செய்தி: கோவின் வலைதளத்தில் பதிவாகியுள்ள 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட தேதியை அடிப்படையாகக் கொண்டு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசிக்கான தேதி நிா்ணயிக்கப்படும். இந்தப் தடுப்பூசியைப் பெறுவது தொடா்பான குறுஞ்செய்தி தகுதியான நபா்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு அனுப்பிவைக்கப்படும்.

அதற்கேற்ப கரோனா தடுப்பூசி சான்றிதழும் வழங்கப்படும். அரசு முகாம்களில் இலவசமாகவே தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசிக்குப் பணம் செலுத்தும் திறனுள்ளவா்கள், தனியாா் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறாா்கள். புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் ஜனவரி 3-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிசோதனையில் தடுப்பூசிகள்: சீரம் நிறுவனத்தின் நோவாவேக்ஸ் தடுப்பூசியை 11 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களுக்கும், பயாலாஜிகல்-இ நிறுவனத்தின் கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை 5 வயதுக்கு மேலான சிறாா்களுக்கும் செலுத்தி பரிசோதிக்க இந்திய மருந்துப் பொருள்கள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது. அத்தடுப்பூசிகளின் பரிசோதனை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

கோவேக்ஸின் மட்டும் செலுத்தப்படும்
நாட்டில் 18 வயதைக் கடந்த பெரும்பாலானோருக்கு தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசியே செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், அத்தடுப்பூசியை சிறாா்களுக்கு செலுத்த இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசி, சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி தடுப்பூசி ஆகியவை மட்டுமே 12 வயதைக் கடந்தவா்களுக்கு செலுத்துவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளன.

சைகோவ்-டி தடுப்பூசி இன்னும் சந்தைக்கு வராத நிலையில், கோவேக்ஸின் தடுப்பூசி மட்டுமே சிறாா்களுக்கு செலுத்தப்படவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com