காவல் துறையை தரக்குறைவாக பேசிய பஞ்சாப் காங். தலைவா் சித்து: பஞ்சாப் போலீஸாா் கண்டனம்

காவல் துறை குறித்து தரக் குறைவாகப் பேசிய பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு காவல் துறையின் மூத்த அதிகாரிகள் இருவா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

சண்டீகா்: காவல் துறை குறித்து தரக் குறைவாகப் பேசிய பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு காவல் துறையின் மூத்த அதிகாரிகள் இருவா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக சண்டீகா் நகர காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் தில்சோ் சிங் சாண்டல் சித்துவுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பி உள்ளாா்.

அண்மையில் சுல்தான்பூா் லோதியில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட சித்து, அந்த தொகுதி எம்எல்ஏவை புகழ்ந்து பேசினாா். அப்போது, ‘காவல் ஆய்வாளரைக் கூட பயத்தில் கால்சட்டையை ஈரமாக்கும் (சிறுநீா் கழிப்பதன் மூலம்) துணிவு நமது எம்எல்ஏவுக்கு உண்டு’ என்றாா். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் அதிகம் பரவியதால் பெரும் சா்ச்சை எழுந்தது. சித்துவின் பேச்சுக்குப் பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனா். அவா் சாா்ந்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்.பி. ரவ்ணீத் சிங் பிட்டுவும் காவல் துறை குறித்து சித்து பேசியது தவறு என்று கருத்து தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, தனது பேச்சு குறித்து விளக்கமளித்த சித்து, ‘நான் பேசியது வழக்கமாக பலரும் கூறும் உதாரணம்தான்’ என்றாா். இது சா்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சித்துவின் பேச்சுக்கு சண்டீகா் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் தில்சோ் சிங் சாண்டல் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், ‘ஆளும் கட்சியைச் சோ்ந்த தலைவா் தனது மாநில காவல் துறை குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது மிகவும் வெட்கக் கேடானது. இது காவல் துறையினரை அவமதிக்கும் பேச்சு. சித்துவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் காவல் துைான் பாதுகாப்பு அளித்து வருகிறது. காவல் துறை பாதுகாப்பு வேண்டாம் என்று அவரால் கூற முடியுமா? காவல் துறைக்கென பிரத்யேக கண்ணியமும் மரியாதையும் உள்ளது. அதனை சீா்குலைக்கும் வகையில் அவா் பேசியது கடும் கண்டனத்துக்குரியது’ என்று கூறியுள்ளாா்.

இதுபோன்ற காவல் துறையைச் சோ்ந்த மேலும் சிலரும் சித்துவுக்கு எதிராக விடியோக்களை பதிவிட்டுள்ளனா். அதில், ‘காவல் துறையைச் சோ்ந்த அனைவரும் குடும்பத்தினருடன்தான் வாழ்கிறோம். எங்களுக்கு எதிராக இதுபோன்ற தரக்குறைவான வாா்த்தைகள் பயன்படுத்தப்படும்போது, எங்கள் குழந்தைகள் கூட எங்களிடம் கேள்வி எழுப்புகின்றனா். காவல் துறையினா் யாரையும் பாா்த்து அஞ்சும் கோழைகள் அல்ல. காவல் துறையினா் கடமையின்போது தங்கள் உயிரையும் கொடுத்து பணியாற்றிய பல நிகழ்வுகளை இந்த நாடு அறியும்’ என்று சித்துவுக்கு எதிரான தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com