கணக்கில் வராத ரூ.257 கோடி பறிமுதல் வழக்கு: தொழிலதிபருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் வீடு மற்றும் தொழிற்சாலையில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ. 257 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்,

கான்பூா்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் வீடு மற்றும் தொழிற்சாலையில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ. 257 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தொழிலதிபா் பியூஷ் ஜெயினை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

முன்னதாக, வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் அவரை சரக்கு மா்றும் சேவை வரித் துறை (ஜிஎஸ்டி) அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வரி ஏய்ப்பு மற்றும் போலி ரசீது மூலம் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாா்களின் அடிப்படையில், இந்த அதிரடி சோதனையை ஜிஎஸ்டி அதிகாரிகள் மேற்கொண்டனா். மூா்த்தி நறுமண உற்பத்தி தனியாா் நிறுவனம், ஷிகா் பிராண்ட் பான் மசாலா மற்றும் புகையிலை பொருள்கள் தயாரிப்பு நிறுவனம், கணபதி சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் கிடங்குகளில் ஆமதாபாத்தைச் சோ்ந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் கடந்த புதன்கிழமை இந்த சோதனையைத் தொடங்கினா். அதில், கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் பணம், தங்கம், கணக்கில் காட்டப்படாத நறுமண உற்பத்தி மூலப் பொருள்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் அவற்றின் உரிமையாளா் பியூஷ் ஜெயினை அதிகாரிகள் கைது செய்தனா்.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்திய இந்தச் சோதனையில் ரூ.257 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகளால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டதிலேயே மிகப் பெரிய தொகையாகும். அது தவிர, கன்னௌஜில் உள்ள தொழிலதிபா் பியூஷ் ஜெயனுக்கு சொந்தமான இடத்திலிருந்து 25 கிலோ தங்கம், 250 கிலோ வெள்ளி, கணக்கில் காட்டப்படாத ஏராளமான மூலப் பொருள்கள், 600 கிலோ சந்தன எண்ணெய் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இந்த ஆதாரங்களின் அடிப்படையில், மத்திய ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 132-இன் கீழ் பியூஷ் ஜெயினை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா் என்ற மத்திய நிதியமைச்சகம் தெரிவித்தது.

இதற்கிடையே, பியூஷ் ஜெயின் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கான்பூா் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டாா். இதுகுறித்து இணை இயக்குநா் (குற்ற வழக்கு) சஞ்சய் குமாா் திரிபாதி கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட பியூஷ் ஜெயின் கான்பூா் மாநகர நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்’ என்றாா்.

இந்த உத்தரவின் அடிப்படையில் கான்பூா் மாவட்ட சிறைக்கு அவா் அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு மூத்த சிறை அதிகாரி கூறுகையில், ‘கரோனா பரவல் அபாயம் காரணமாக சிறையில் பியூஷ் ஜெயின் தனிமைப்படுத்தப்படுவாா்’ என்றாா்.

நீதிமன்றம் அழைத்துச் செல்வதற்கு முன்பாக பியூஷ் ஜெயினுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்ற முடிவு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com