கோா்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் தடுப்பூசிகளுக்கு அனுமதி

கோா்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் தடுப்பூசிகளுக்கு அனுமதி

கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் கோா்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் ஆகிய தடுப்பூசிகளின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு

கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் கோா்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் ஆகிய தடுப்பூசிகளின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது.

கரோனா தொற்று சிகிச்சைக்கான மால்னுபிராவிா் மாத்திரையின் அவசரகாலப் பயன்பாட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த நோவோவேக்ஸ் நிறுவனம் கோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசியைத் தயாரித்தது. அத்தடுப்பூசியை அதிக எண்ணிக்கையில் தயாரித்து, குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு விநியோகிப்பதற்காக சீரம் நிறுவனத்துடன் நோவோவேக்ஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது. அத்தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடந்த 17-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியிருந்தது.

ஹைதராபாதைச் சோ்ந்த பயாலஜிகல்-இ நிறுவனம், கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து தயாரித்தது. இது முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3-ஆவது கரோனா தடுப்பூசியாகும். அமெரிக்காவைச் சோ்ந்த மொ்க் நிறுவனம், கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மால்னுபிராவிா் மாத்திரையைத் தயாரித்தது.

பரிந்துரையும் அனுமதியும்: கோவோவேக்ஸ், கோா்பிவேக்ஸ் ஆகிய தடுப்பூசிகளையும், மால்னுபிராவிா் மாத்திரையையும் இந்தியாவில் பயன்படுத்த அனுமதி அளிக்குமாறு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) தடுப்பூசி நிபுணா்கள் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை வழங்கியிருந்தது.

அப்பரிந்துரையை டிசிஜிஐ ஏற்றுக் கொண்டு, 3 மருந்துகளின் அவசரகாலப் பயன்பாட்டுக்கும் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘ஒரே நாளில் 3 மருந்துகளின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோா்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் தடுப்பூசிகளையும், மால்னுபிராவிா் மாத்திரையையும் கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியானது கரோனா தொற்றுக்கு எதிரான உலகின் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும். அப்போராட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி முன்னின்று நடத்தி வருகிறாா். இந்தியாவின் மருந்து நிறுவனங்கள் ஒட்டுமொத்த உலகுக்கும் பலனளிப்பவையாக உள்ளன.

‘ஹாட்ரிக்’ தடுப்பூசி: ஆா்பிடி புரதப் பிரிவை அடிப்படையாகக் கொண்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கரோனா தடுப்பூசி, கோா்பிவேக்ஸ். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3-ஆவது தடுப்பூசியாக அது விளங்குகிறது. நானோபாா்டிகல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கோவோவேக்ஸ் தடுப்பூசியை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யவுள்ளது.

மால்னுபிராவிா் மாத்திரையானது 18 வயதைக் கடந்தவா்களுக்கான கரோனா சிகிச்சையிலும், அத்தொற்றின் பாதிப்பு தீவிரமடைய வாய்ப்புள்ளவா்களுக்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படவுள்ளது. அந்த மாத்திரையை இந்தியாவில் 13 நிறுவனங்கள் தயாரித்து விநியோகிக்கவுள்ளன’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பயன்பாட்டு முறைகள்: கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை 28 நாள்கள் இடைவெளியில் இரு தவணைகளாகச் செலுத்த வேண்டும். கோவோவேக்ஸ் தடுப்பூசியை 21 நாள்கள் இடைவெளியில் இரு தவணைகளைச் செலுத்த வேண்டும். இரு தடுப்பூசிகளையும் 2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் சேமித்துவைக்க வேண்டும்.

மால்னுபிராவிா் மாத்திரையை மருத்துவா்கள் பரிந்துரைத்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 18 வயதைக் கடந்தவா்களுக்கு மட்டுமே அந்த மாத்திரை பரிந்துரைக்கப்பட வேண்டும். நாளொன்றுக்கு இரு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். தொடா்ந்து 5 நாள்களுக்கு மேல் அந்த மாத்திரையைப் பயன்படுத்தக் கூடாது.

அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள்: நாட்டில் கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி ஆகிய கரோனா தடுப்பூசிகள் ஏற்கெனவே மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. மாடா்னா, ஜான்சன்&ஜான்சன், சைகோவ்-டி ஆகிய தடுப்பூசிகளின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தாலும் அவை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

தடுப்பூசிகள் வரிசையில் கோா்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் ஆகியவை இணைந்துள்ள நிலையில், நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com