மகாத்மா காந்தி பற்றி அவதூறு கருத்து: ஹிந்து மத தலைவர் மீது வழக்குப் பதிவு

மகாத்மா காந்தி பற்றி இழிவாகப் பேசியதாக ஹிந்து மத தலைவர் காளிசரண் மகராஜ் மீது மகராஷ்டிரம், சத்தீஸ்கர் மாநில போலீஸார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

மகாத்மா காந்தி பற்றி இழிவாகப் பேசியதாக ஹிந்து மத தலைவர் காளிசரண் மகராஜ் மீது மகராஷ்டிரம், சத்தீஸ்கர் மாநில போலீஸார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
 மகாராஷ்டி மாநிலம், அகோலாவின் சிவாஜி நகரில் வசிப்பவர் ஹிந்து மதத் தலைவர் காளிசரண் மகராஜ். இவர் சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள ராவண் பாதா மைதானத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்ற சமய மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், மகாத்மா காந்தி பற்றி இழிவாகவும், கோட்சேவைப் புகழ்ந்தும் பேசினார். ஹிந்து மதத்தைப் பாதுகாக்க மக்கள், தீவிரமான ஹிந்துவையே ஆட்சியாளராகத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதையடுத்து அவர் மீது ராய்ப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம், அகோலாவில் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் பிரசாந்த் கவாண்டே அளித்த புகாரின்பேரில் கோட்வாலி காவல் நிலைய போலீஸார் காளிசரண் மகராஜ் மீது வழக்குப் பதிந்துள்ளனர். காங்கிரஸ் உள்ளூர் தலைவர்களும் கோட்வாலி காவல் நிலையம் முன்பு அவரைக் கண்டித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அவரின் இக்கருத்துக்கு காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
 சமூகத்தில் வஞ்சகக் கருத்துகளைப் பரவ விட்டும், மகாத்மா காந்தி குறித்து இழிவான கருத்துகளைத் தெரிவித்தும் ஒருவர் தனது நோக்கத்தை நிறைவேற்ற நினைத்தால் அது மாயையாகத்தான் இருக்கும். இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து மக்களைத் தூண்டிவிட நினைப்பவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 இதுதொடர்பாக மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் அகர்வால் கூறியதாவது: காளிசரண் மகராஜை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com