நீட் தேர்வில் விலக்கு விவகாரம்: குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் தமிழக எம்.பி.க்கள் குழு மனு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் குழு குடியரசுத் தலைவர் மாளிகை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் குழு குடியரசுத் தலைவர் மாளிகை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தது.
 இதே கோரிக்கை தொடர்பாக இந்தக் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை புதன்கிழமை (டிச. 29) சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளனர்.
 மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரி வருகின்றன.
 தமிழக சட்டப்பேரவையில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 இந்தத் தீர்மானத்தை தமிழக ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது குறித்தும், இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் அளிக்கக் கோரியும் கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி நாளன்று திமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
 இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில், அதிமுக, தமிழக காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவர் மாளிகை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
 மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய விவகாரம் தொடர்பாக டி.ஆர்.பாலு உள்ளிட்ட அனைத்துக் கட்சி (மதிமுக நீங்கலாக) நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை புதன்கிழமை (டிச. 29) நண்பகல் 12 மணிக்கு நேரடியாகச் சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.
 இந்தக் குழுவில் மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன், மக்களவை உறுப்பினர்கள் ஜெயக்குமார் (காங்கிரஸ்), சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்), செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்ட்), தொல் திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), நவாஸ் கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com