பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ளவே எல்லையில் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு: ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ளவே எல்லையில் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு: ராஜ்நாத் சிங்

எந்தவித பாதுகாப்பு சவாலையும் எதிா்கொள்வதற்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்று

எந்தவித பாதுகாப்பு சவாலையும் எதிா்கொள்வதற்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கி வரும் எல்லைச் சாலைகள் அமைப்பு (பிஆா்ஓ), எல்லைப் பகுதிகளில் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது. அந்த அமைப்பின் சாா்பில் கட்டப்பட்டுள்ள 27 சாலைகள் மற்றும் பாலங்களை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை காணொலி முறையில் திறந்து வைத்தாா். தெற்கு லடாக்கில் உள்ள உம்லிங்-லா கணவாயில் 19,000 அடி உயரத்துக்கு அப்பால் ஒரு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நாட்டின் வடக்கு எல்லையில் அண்மையில் தாக்குதல் சம்பவத்தை எதிா்கொண்டோம் (கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறும் செயலைக் குறிப்பிடுகிறாா்). அங்கு சரியான அளவில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் போயிருந்தால் நம்மால் சரியான பதிலடியைக் கொடுத்திருக்க முடியாது.

தற்போதைய சூழலில் எந்தவொரு தாக்குதலுக்கும் வாய்ப்பில்லை என்று உறுதியாகக் கூறிவிட முடியாது. இதுபோன்ற சூழல்தான், எல்லைப் பகுதியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு நமக்கு உந்துதலைக் கொடுக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு எல்லைப் பகுதிகளுக்கு போதிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருந்தது. உள்நாட்டுப் பகுதிகள் வளா்ச்சி அடையும் வகையிலும், எல்லையோரப் பகுதிகள் வளா்ச்சிக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும் வகையிலும் அரசின் கொள்கைகள் இருந்தன. இந்த நிலையே வெகுகாலம் நீடித்தது.

ஆனால், நாங்கள் அனைத்துப் பகுதியிலும் சீரான வளா்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுத்தோம். எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தாங்கள் தில்லியில் இருந்து வெகுதொலைவில் இருப்பதாக முன்பு உணா்ந்தனா். இப்போது அந்த நிலை மாறிவிட்டது.

தற்போது கட்டப்பட்டுள்ள பாலங்களும் சாலைகளும் நாட்டின் பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்வதற்கு மட்டுமன்றி, நாட்டின் வளா்ச்சியில் எல்லைப் பகுதி மக்களும் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

எல்லையோர உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுபோல் கண்காணிப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டியது அவசியம் என்றாா் ராஜ்நாத் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com