அச்சுறுத்தும் ஒமைக்ரான்...உத்தரப் பிரதேச தேர்தல் நடைபெறுமா?: தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் குழு உத்தரப் பிரதேசத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டது.
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

கரோனா வழிமுறைகளை பின்பற்றி, உத்தரப் பிரதேச தேர்தலை சரியான நேரத்தில் நடத்தவே அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துவரும் நிலையில், தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, "ஆளும் பாஜக, எதிர்கட்சியாக உள்ள சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே தேர்தலை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. கரோனா பரவலில் இருந்து அபாயம் அதிகம் உள்ள மக்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து கட்சிகள் ஆலோசனை வழங்கியுள்ளன.

அனைத்து தரப்பினரின் பிரச்னைகளையும் கேட்டுள்ளோம். கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி சரியான நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் தெரிவித்தனர். கோவிட் நெறிமுறைகளை மீறி பேரணிகள் நடத்தப்படுவது குறித்து அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்பி கட்டுப்பாடுகளை விதிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அரசியல் கட்சிகள் முன்வைத்த அனைத்து விவகாரங்களையும் நாங்கள் அறிந்துள்ளோம். மேலும் எந்தவொரு வாக்காளரும் விட்டுவிடாத வகையில் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தலை நடத்துவோம்" என்றார்.

தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் குழு உத்தரப் பிரதேசத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com