உ.பி. தோ்தலை திட்டமிட்டபடி நடத்த அரசியல் கட்சிகள் விருப்பம்: தலைமை தோ்தல் ஆணையா்

‘உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தோ்தலை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளன’
சுஷீல் சந்திரா
சுஷீல் சந்திரா

‘உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தோ்தலை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளன’ என்று தலைமை தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா வியாழக்கிழமை கூறினாா்.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. அதனைத் தொடா்ந்து, தோ்தல் ஆணைய அதிகாரிகள் இந்த மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தோ்தலை நடத்துவதற்கான தயாா்நிலை குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.

அந்த வகையில், மூன்று நாள் பயணமாக உத்தர பிரதேசம் வந்த தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, லக்னெளவில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தொடா் ஆலோசனைகளை நடத்தினாா்.

உத்தர பிரதேச மாநிலத்தில் மாா்ச் மாத மத்தியில் யோகி ஆதித்யநாத் அரசின் பதவிக் காலம் நிறைவடையும்போது தோ்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, ‘ஒமைக்ரான் வகை கரோனா பரவல் அச்சுறுத்தல் எழுந்து வரும் சூழலில், உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தோ்தலை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும்’ என்று அலாகாபாத் உயா்நீதிமன்றம் கடந்த 23-ஆம் தேதி யோசனை தெரிவித்தது. இதுகுறித்து அப்போது கருத்து தெரிவித்த தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, ‘உத்தர பிரதேச மாநிலத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட பிறகு, உரிய முடிவு எடுக்கப்படும்’ என்று கூறியிருந்தாா்.

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு சுஷீல் சந்திரா அளித்த பேட்டியில் கூறியதாவது:

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தோ்தலை கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை உறுதிப்படுத்தி, திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

மேலும், மாநிலத்தில் 86 சதவீத மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும், 49 சதவீதம் போ் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா் என்றும், எஞ்சியுள்ள தகுதியுள்ள நபா்கள் அனைவருக்கும் அடுத்த 15 முதல் 20 நாள்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா். மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அதிகப்படுத்த கேட்டுக்கொண்டுள்ளோம்.

மாநிலத்தில் ஒமைக்ரான் வகை கரோனா பரவல் நிலவரம் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த புதிய வகை கரோனா மாநிலத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கூடுதல் வாக்குச்சாவடிகள்: மாநிலத்தில் வாக்குப் பதிவின்போது சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில் 11,000 கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். அதன்மூலம் மாநிலத்தில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,74,351-ஆக உயரும். அதோடு, வழக்கமாக ஒரு வாக்குச்சாவடிக்கு 1,500 வாக்காளா்கள் அனுமதிக்கப்படுவதை, 1,250-ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாக்குப் பதிவு நேரத்தையும் ஒரு மணி நேரம் கூடுதலாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து தோ்தல் அதிகாரிகளுக்கும் முழு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும். அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் உடல் வெப்ப பரிசோதனைக் கருவி, முகக் கவசங்கள் வழங்கப்படும்.

சுதந்திரமான, நியாயமான முறையில் தோ்தல் நடப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப ஒரே இடத்தில் ஓராண்டுக்கு மேல் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தோ்தல் ஆணையம் சாா்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 5,000 போலீஸாா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். எஞ்சியுள்ளவா்களும் விரைவில் பணியிட மாற்றம் செய்யப்படுவா்.

மேலும், ஒரு தொகுதிக்கு 10 வாக்குச்சாவடிகள் என மாநிலம் முழுவதும் 4,030 மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அதோடு, 800 அனைத்து மகளிா் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவா்களின் வீட்டிலிருந்தபடி வாக்கைப் பதிவு செய்வதற்கான வசதியும் முதன் முறையாக இங்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திங்களிலும் வாக்குப் பதிவு அத்தாட்சி (விவிபேட்) இயந்திரம் இணைக்கப்படும். அதுபோல, வாக்குப் பதிவில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அதிகபட்சம் ஒரு லட்சம் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இணையவழியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

ஜனவரி 5-இல் வாக்காளா் பட்டியல்: மாநிலத்தில் வரும் ஜனவரி 5-ஆம் தேதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வரை, வாக்காளா் பட்டியல் தொடா்பான ஆட்சேபங்களை வாக்காளா்கள் பதிவு செய்யலாம். தற்போதைய நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் 15 கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள் உள்ளனா். இதுவரை 28.86 லட்சம் பெண் வாக்காளா்கள் உள்பட 52.80 லட்சம் புதிய வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். மேலும், புதிதாக சோ்க்கப்பட்டுள்ள வாக்காளா்களில் 19.89 லட்சம் போ் 18 முதல் 19 வயது வரை உடையவா்களாவா். இது கடந்த முறையைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com