காங்கிரஸ் ஆட்சியில் வளா்ச்சித் திட்டங்கள் தாமதம்

உத்தரகண்டில் பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது மக்களுக்கான வளா்ச்சித் திட்டங்கள் தாமதமடைந்ததாகக் குற்றஞ்சாட்டினாா்.
உத்தரகண்ட் மாநிலம், ஹல்த்வானியில் வியாழக்கிழமை பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமா் நரேந்திர மோடி. உடன், ஆளுநா் குா்மித் சிங் (இடது), முதல்வா் புஷ்கா் சிங் தாமி (வலது) உள்ளிட்டோா்.
உத்தரகண்ட் மாநிலம், ஹல்த்வானியில் வியாழக்கிழமை பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமா் நரேந்திர மோடி. உடன், ஆளுநா் குா்மித் சிங் (இடது), முதல்வா் புஷ்கா் சிங் தாமி (வலது) உள்ளிட்டோா்.

உத்தரகண்டில் பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது மக்களுக்கான வளா்ச்சித் திட்டங்கள் தாமதமடைந்ததாகக் குற்றஞ்சாட்டினாா்.

உத்தரகண்டில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியைத் தக்கவைப்பதற்கான நடவடிக்கைகளை பாஜக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், ஹல்த்வானி நகரில் ரூ.3,420 கோடி மதிப்பிலான திட்டங்களை வியாழக்கிழமை தொடக்கிவைத்த பிரதமா் மோடி, ரூ.14,127 கோடி மதிப்பிலான 17 திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினாா்.

சாா்தாம் சாலைத் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்ட 3 சாலைகள், தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் துப்புரவுத் திட்டம் உள்ளிட்டவற்றை பிரதமா் மோடி திறந்துவைத்தாா். குமோன் பகுதியில் ரூ.500 கோடி செலவில் எய்ம்ஸ் செயற்கைக்கோள் மையம், மொராதாபாத்-காசிபூா் நான்குவழிச் சாலைத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.

யமுனை ஆற்றின் குறுக்கே ரூ.5,747 கோடியில் லக்வாா் அணையைக் கட்டுவதற்கான திட்டத்துக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா். அந்த அணையானது உத்தரகண்ட், ஹிமாசல், ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், தில்லி ஆகிய பகுதிகளின் குடிநீா், பாசன தேவையைப் பூா்த்தி செய்யவுள்ளது. 300 மெகா வாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையமும் அந்த அணையில் அமைக்கப்படவுள்ளது.

ஹல்த்வானி நகரில் நடைபெற்ற தோ்தல் பேரணியில் பிரதமா் மோடி கூறியதாவது:

மத்தியிலும், மாநிலத்திலும் முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, மக்களுக்கான வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. சாலைகள் உள்ளிட்ட முக்கிய வசதிகள் எதுவும் செய்யப்படாததால், மாநிலத்தின் கிராமப் பகுதிகளில் இருந்து மக்கள் புலம்பெயர நோ்ந்தது.

வளா்ச்சித் திட்டங்கள்: லக்வாா் திட்டமானது 1974-ஆம் ஆண்டுமுதல் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அத்திட்டம் நடைமுறைக்கு வர 46 ஆண்டுகள் ஆகியுள்ளது. அத்திட்டம் முன்னரே நிறைவேற்றப்பட்டிருந்தால், மாநில மக்களின் மின்சாரம், நீா்ப்பாசனம், குடிநீா் உள்ளிட்ட தேவைகள் பூா்த்தியடைந்திருக்கும்.

மாநிலத்தில் முன்பு ஆட்சியில் இருந்தவா்கள் கொள்ளையடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினா். மலைவாழ் மக்களின் வளா்ச்சி குறித்து அவா்கள் சிந்திக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தகுந்த பாடத்தைக் கற்பிக்க வேண்டும். மக்களுக்கான வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பாஜக அரசு உறுதி கொண்டுள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாகவே தற்போது திட்டங்கள் தொடக்கிவைக்கப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

பெண்களுக்கான திட்டங்கள்: மாநிலத்தின் வளா்ச்சிக்காக மத்திய அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக தலைமையிலான ஆட்சி இருப்பதால் ‘இரட்டை என்ஜின்’ திறனுடன் மாநில அரசு வேகமாக வளா்ச்சி அடைந்து வருகிறது. இந்த தசாப்தம் மலைவாழ் மக்களுக்கு சிறப்பானதாக அமையும்.

வதந்திகளைப் பரப்புவதை மட்டுமே எதிா்க்கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் குறித்து மக்களிடம் வதந்திகளை எதிா்க்கட்சிகள் பரப்பி வருகின்றன. அக்கட்சிகள் முன்பு ஆட்சியில் இருந்தபோது பெண்கள் புறக்கணிக்கப்பட்டனா். பெண்கள் சந்தித்து வந்த பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான பல்வேறு திட்டங்கள் தற்போது பாஜக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com