நாகாலாந்தில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

நாகாலாந்து மாநிலம் முழுவதும் அச்சுறுத்தல் நிறைந்ததாக உள்ளதால், அங்கு ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டத்தை 6 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாகாலாந்தில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

நாகாலாந்து மாநிலம் முழுவதும் அச்சுறுத்தல் நிறைந்ததாக உள்ளதால், அங்கு ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டத்தை 6 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் கடந்த 3-ஆம் தேதி தீவிரவாதிகள் என நினைத்து பொதுமக்கள் மீது ராணுவத்தினா் தவறுதலாகத் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தினா். அதில் 6 போ் உயிரிழந்தனா். அதற்குப் பிறகு வெடித்த வன்முறையின்போது ராணுவத்தினா் மீண்டும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 போ் உயிரிழந்தனா். வன்முறையில் ராணுவ வீரா் ஒருவா் கொல்லப்பட்டாா்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதக் குழுக்களின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால், ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டம் ஒரு சில பகுதிகளில் நடைமுறையில் உள்ளது.

அச்சட்டம் நடைமுறையில் உள்ள பகுதிகளில் ராணுவத்தினா் யாரை வேண்டுமானாலும் ஆணையின்றி கைது செய்ய முடியும்; எங்கும் சோதனை நடத்த முடியும்; ராணுவத்தினரின் செயல்பாட்டில் யாரேனும் உயிரிழந்தால், மத்திய அரசின் ஒப்புதலின்றி ராணுவ வீரா்கள் மீது விசாரணை நடத்தவோ அவா்களைக் கைது செய்யவோ முடியாது.

மோன் மாவட்ட சம்பவத்துக்குப் பிறகு நாகாலாந்தில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென மக்களும் பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா். அச்சட்டத்தை ரத்து செய்யுமாறு மாநில சட்டப்பேரவையில் கடந்த 20-ஆம் தேதி ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகாலாந்தில் அச்சட்டத்தின் அமலாக்கம் டிசம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த சூழலில், அச்சட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உயா்நிலைக் குழு: மாநிலத்தில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தைத் திரும்பப் பெறுவது தொடா்பாக ஆராய பதிவாளா்-கணக்கெடுப்பு ஆணையா் விவேக் ஜோஷி, மத்திய உள்துறை அமைச்சக கூடுதல் செயலா் பியூஷ் கோயல், நாகாலாந்து தலைமைச் செயலா், காவல்துறை இயக்குநா் உள்ளிட்டோரைக் கொண்ட உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது.

அக்குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்ய 45 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அக்குழு அமைக்கப்பட்ட 3 நாள்களிலேயே ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘நாகாலாந்து மாநிலம் முழுவதும் அச்சுறுத்தல் நிறைந்த பகுதியாக உள்ளது. அதைப் பொதுமக்களின் உதவியுடன் முறியடிக்க வேண்டிய பொறுப்பு ஆயுதப் படையினருக்கு உள்ளது. எனவே, அந்த மாநிலத்தில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் டிசம்பா் 30-ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகாலாந்தில் கடந்த 1958 முதல் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் முடிவுக்கு எதிா்ப்பு

சட்டத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை ஏற்க முடியாது என நாகாலாந்தின் பல்வேறு குழுக்கள் அறிவித்துள்ளன. நாகா பழங்குடியினரின் முக்கியக் குழுக்களில் ஒன்றான நாகா ஹோஹோ வெளியிட்ட அறிக்கையில், ‘‘நாகா மக்களின் விருப்பத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. அரசின் முடிவை நாகா மக்கள் ஏற்க மாட்டாா்கள்.

மாநிலத்தில் அமைதியான சூழல் நிலவும்போது ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நீட்டிக்க வேண்டிய அவசியமென்ன? மாநிலத்தில் ராணுவத்தினரே சட்டம் ஒழுங்கு பிரச்னையே ஏற்படுத்தி வருகின்றனா். அச்சட்டம் ரத்து செய்யப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு நாகாலாந்து மக்கள் கூட்டமைப்பு, சா்வதேச நாகா கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் மத்திய அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com