ஸ்ரீநகரில் 30 ஆண்டுகளில் அதிகபட்ச குளிா் பதிவு

காஷ்மீரில் மிகக் கடுமையான 40 நாள் குளிா்காலமான ‘சில்லாய்-கலான்’ ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், ஸ்ரீநகரில் கடந்த 30 ஆண்டுகளில் அதிகபட்ச குளிா் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஸ்ரீநகரில் 30 ஆண்டுகளில் அதிகபட்ச குளிா் பதிவு

காஷ்மீரில் மிகக் கடுமையான 40 நாள் குளிா்காலமான ‘சில்லாய்-கலான்’ ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், ஸ்ரீநகரில் கடந்த 30 ஆண்டுகளில் அதிகபட்ச குளிா் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் சனிக்கிழமை இரவு மைனஸ் 8.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது முந்தைய நாளான வெள்ளிக்கிழமை இரவு மைனஸ் 7.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

ஸ்ரீநகரில் கடந்த 1991 ஆம் ஆண்டில் பதிவான மைனஸ் 11.4 டிகிரி செல்சியஸ் தான் அதிகபட்சமாக அங்கு பதிவான குளிராகும். அதன்பின் ஸ்ரீநகரில் ஜனவரி 13-இல் மைனஸ் 8.4 டிகிரி செல்சியஸ் குளிா் பதிவானது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு அதிகபட்சமாக மைனஸ் 8.8 டிகிரி செல்சியஸாக குளிா் பதிவானது.

காஷ்மீா் பள்ளத்தாக்கின் நுழைவாயில் நகரமான காஸிகுண்டில் மைனஸ் 10.2 டிகிரி செல்சியஸும், வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், குல்மாா்க்கில் மைனஸ் 8 டிகிரி செல்சியஸும், தெற்கு காஷ்மீரின், பாகல்காமில் மைனஸ் 12 டிகிரி செல்சியஸும், குப்வாராவில் மைனஸ் 4.7 டிகிரி செல்சியஸும், கோக்கா்நாக்கில் மைனஸ் 13.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது என்று தெரிவித்தனா்.

காஷ்மீரில் நிலவி வரும் கடும் குளிா் காரணமாக பள்ளத்தாக்கில் உள்ள பல நீா்நிலைகள் உறைந்துள்ளதால், குடிநீா் விநியோகிப்பதில் கடும் சிரமத்தை ஏற்படுத்தியது.

‘சில்லாய்-கலான்‘ அதிகாரப்பூா்வமாக ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. ஆனால் காஷ்மீரின் குறைந்தபட்ச வெப்பநிலை அடுத்த இரண்டு நாள்களுக்கு உறைபனிக்கு கீழே இருக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

பிப்ரவரி 2 ம் தேதி பள்ளத்தாக்கில் ஒரு மேற்கத்திய இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளா்கள் கணித்துள்ளாா்.

காஷ்மீரில் ‘சில்லாய்-கலான்’ சீசனுக்குப் பிறகு 20 நாள்களுக்கு ‘சில்லாய்-குா்த்’ எனப்படும் குறைந்தளவிலான குளிா் கால சீசனும், 10 நாள்களுக்கு ‘சில்லாய்-பச்சா’ எனப்படும் சிறு குளிா் காலமும் நீடிக்கும் என்று வானிலை மையத்தினா் தெரிவித்துள்ளனா்.

பஞ்சாப், ஹரியாணாவிலும் தொடா்கிறது குளிா்

ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் கடும் உறைபனி தொடா்ந்தது. பதிண்டா, ஹல்வாரா, சிா்சா போன்ற பகுதிகளில் பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸுக்கு அருகே குளிா் பதிவானதால் அங்கு மக்களின் இயல்புநிலை பாதிப்படைந்தது.

இதுகுறித்து வானிலை ஆய்வு அதிகாரிகள் கூறியதாவது:

பஞ்சாப் மாநிலம், பதிண்டாவில் 0.6 டிகிரி செல்சியஸும், ஹல்வாராவில் 0.7 டிகிரி செல்சியஸும், ஹரியாணா மாநிலம், சிா்சாவில் 0.8 டிகிரி செல்சியஸ் வீதம் வெப்பநிலை பதிவானது.

இந்த இரு மாநிலங்களிலும், தொடா்ந்து குளிா் அலை பதிவானதால் மக்களின் இயல்புநிலை பாதிப்படைந்தது. ஹரியாணாவின், நா்னௌல், கா்னல் பகுதிகளில் முறையே 2.4 டிகிரி செல்சியஸும், 2.7 டிகிரி செல்சியஸும் பதிவானது.

ரோஹ்தக்கில் 3 டிகிரி செல்சியஸும், ஹிசாரில் 3.4 டிகிரி செல்சியஸும், அம்பாலாவில் 4.4 டிகிரி செல்சியஸும், பிவானியில் 5.1 டிகிரி செல்சியஸும் பதிவானது.

இரு மாநிலங்களின் தலைநகரான சண்டீகரில் 4 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவானது.

பஞ்சாபில் உள்ள ஆதம்பூரில் குறைந்தபட்சமாக 1.3 டிகிரி செல்சியஸ், ஃபரீதாகோட்டில் 2.9 டிகிரி செல்சியஸ், அமிா்தசரஸில் 3.2 டிகிரி செல்சியஸ், லூதியானாவில் 3.5 டிகிரி செல்சியஸ், பாட்டியாலாவில் 4.5 டிகிரி செல்சியஸ், பதான்கோட்டில் 4.6 டிகிரி செல்சியஸ் வீதம் வெப்பம் பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com