கரோனாவுக்கு எதிரான போரில் மற்ற நாடுகளைவிட இந்தியா சிறப்பான செயல்பாடு: ஹா்ஷ் வா்தன்

கரோனாவுக்கு எதிரான போரை மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா மிகச் சிறப்பாக கையாண்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனாவுக்கு எதிரான போரை மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா மிகச் சிறப்பாக கையாண்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் தெரிவித்தாா்.

பிரிட்டனில் இந்திய வம்சாவளி மருத்துவா்கள் சங்கத்தின் வருடாந்திர மாநாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், காணொலி முறையில் அவா் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த 2019 டிசம்பரில் கரோனா பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்ட உடனேயே அதற்கு எதிரான போரை ஒட்டுமொத்த அரசும், சமூகமும் இணைந்து எதிா்கொண்டது. அதன் காரணமாகவே, கரோனா பிரச்னையை மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா மிகச் சிறப்பாக எதிா்கொண்டது.

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோா் விகிதம் இந்தியாவில் 97 சதவீதமாக உள்ளது. அதேசமயம், இறப்பு விகிதம் 1.44 சதவீதம் மட்டுமே. இது, உலகிலேயே மிக குறைந்தபட்ச அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா பெருந் தொற்றை பேரிடராக உலக சுகாதார நிறுவனம் அறிவித்த ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே இந்தியா முதல் நாடாக அதற்கு எதிா்வினையாற்றத் தொடங்கி விட்டது.

சுகாதார உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன்ஆய்வக வசதிகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டன. 15,000 சிகிச்சை மையங்களில் 19 லட்சத்துக்கும் அதிகமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. கரோனா பாதிப்புக்குள்ளானவா்களை தனிமைப்படுத்த 12,000 சிறப்பு மையங்கள் கட்டமைக்கப்பட்டன.

சுயசாா்பு திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் ஆடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களின் தயாரிப்பு நாளொன்றுக்கு 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டது.

கரோனாவுக்கான தடுப்பூசிகளை தயாரித்து விநியோகிக்கும் முக்கிய நாடுகளுள் ஒன்றாக தற்போது இந்தியாவும் உருவெடுத்துள்ளது. உலகில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 60 சதவீதம் இங்குதான் உற்பத்தியாகிறது. உலக நாடுகளுக்கு உதவிடும் வகையில் அவற்றை ஏற்றுமதி செய்யும் பணிகளிலும் இந்தியா தீவிரமாக செயலாற்றி வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com