பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்.13-இல் நிறைவடைகிறது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 15-க்கு பதிலாக பிப்ரவரி 13-ஆம் தேதி நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 15-க்கு பதிலாக பிப்ரவரி 13-ஆம் தேதி நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தில்லியில் குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மாநிலங்களவை சுமுகமாகவும், ஆக்கபூா்வமாகவும் நடைபெறுவதை அனைவரும் உறுதி செய்யுமாறு வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டாா்.

குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் காலத்தை நீட்டிக்குமாறு கூட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கட்சித் தலைவா்கள் கோரிக்கை விடுத்தனா். அதனை ஏற்றுக்கொண்ட வெங்கையா நாயுடு, அதற்கு ஆவன செய்யுமாறு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷியிடம் தெரிவித்தாா்.

அவையில் விவசாயிகள் போராட்டம் உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரகலாத் ஜோஷி தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் சிறிய கட்சிகளை சோ்ந்த உறுப்பினா்கள் பேசுவதற்கு போதிய நேரம் வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 15-ஆம் தேதி நிறைவடைவதாக இருந்தது. அதனை இரண்டு நாள்கள் முன்னதாக பிப்ரவரி 13-ஆம் தேதி முடித்துக்கொள்ள கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்து துறை சாா்ந்த நாடாளுமன்றக் குழுக்கள் ஆய்வு செய்ய அன்றைய தினம் அவை ஒத்திவைக்கப்படும். மாா்ச் 8-ஆம் தேதி மீண்டும் அவை கூடும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com