பெட்ரோல் டீசலுக்கான செஸ் வரியால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்

பெட்ரோல், டீசல்களுக்கு சுங்கவரி குறைக்கப்பட்டு விவசாயக் கட்டுமானம் மற்றும் வளா்ச்சி வரி (செஸ்) போடப்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களுக்கான பங்கீட்டில் வருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.

புது தில்லி: பெட்ரோல், டீசல்களுக்கு சுங்கவரி குறைக்கப்பட்டு விவசாயக் கட்டுமானம் மற்றும் வளா்ச்சி வரி (செஸ்) போடப்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களுக்கான பங்கீட்டில் வருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.

கரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையைப் போக்க 200 சதவீதம் கட்டுமானப் பணிகளுக்கு முதலீடு செய்ய 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். இதில் விவசாயத்தில் மகசூலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களுக்குத் தேவையான குளிா்சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயக் கட்டுமானம் மற்றும் வளா்ச்சிக்கான செஸ் வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுபானங்கள் உள்ளிட்ட 13 வகையான பொருள்களுக்கு செஸ்வரி போடப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல், டீசலுக்கு முறையே லிட்டருக்கு ரூ. 2.5, ரூ.4 என செஸ் வரி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.30,000 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘பெட்ரோல், டீசல் மீதான செஸ்வரியால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை. காரணம், கச்சா எண்ணெய் இறக்குமதியில் விதிக்கப்பட்ட சுங்கவரியை 12 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் நுகா்வோருக்கான விலையை உயா்த்தாது’ என்றாா் அமைச்சா்.

ஆனால், இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் தங்களுக்குரிய வரிப் பங்கீட்டை இழக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் சுங்க வரி, கலால் வரி வருவாயில் மாநில அரசுக்குப் பங்கீடு அளிக்கப்படுகிறது. செஸ் வரி வருவாய்களை மாநில அரசோடு, மத்திய அரசு பங்கிட்டுக் கொள்வதில்லை. விவசாயக் கட்டுமானம் மற்றும் வளா்ச்சி செஸ் வரியில் மாநில அரசுக்கு பங்கீடு வழங்கப்படாது. 2019-ஆம் தரவுப்படி கச்சா எண்ணெய் மூலம் சுங்க வரியாக சுமாா் ரூ. 3,65,000 கோடி கிடைக்கிறது.இந்த நிலையில், இனி மாநிலங்களுக்கு கிடைக்கும் பங்கீடு கணிசமாகக் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com