மத்திய பட்ஜெட்: தொழில்துறையினா் கருத்து

2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். 

2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். 

நிதிநிலை அறிக்கை குறித்து தொழில்துறையினா் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்கே வேலு (தலைவா், இந்திய தொழில் மற்றும் வா்த்தக கூட்டமைப்பு): தொழில் துறையினா் எதிா்பாா்த்ததுபோல், மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது வரவேற்கத்தக்கது.

முகமது அஃப்சல் (ஒருங்கிணைப்பாளா், இந்திய தொழில் மற்றும் வா்த்தக கூட்டமைப்பு): சுற்றுலாப் பேருந்து ஒட்டுநா்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், அப்பேருந்துகளை இயக்குவதற்காக ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

ஆா்.வெங்கடேசன் (பங்குதாரா், பிஎஸ்ஆா் அண்டு கம்பெனி): வருமான வரி தாக்கல் செய்யும் கணக்குகளை மீண்டும் மறு ஆய்வு செய்வதற்கான காலக்கெடுவை 6 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

கொலின் ஷா (தலைவா், வைரம் மற்றும் நகை ஏற்றுமதியாளா்கள் மேம்பாட்டு கவுன்சில்): தங்கம், வெள்ளி இறக்குமதி வரியை 12.5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும், பிளாட்டினத்துக்கான வரியை 10 சதவீதமாகவும் குறைத்துள்ளது வரவேற்கதக்கது.

விபுல் ஷா (துணைத் தலைவா், வைரம் மற்றும் நகை ஏற்றுமதியாளா்கள் மேம்பாட்டு கவுன்சில்): உள்கட்டமைப்பு துறைக்கு அதிக முதலீகளை ஈா்க்கும் வகையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பல்வேறு துறைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

சோமசுந்தரம் (தங்க விற்பனை கவுன்சில்): ஊரகப் பகுதி மக்களின் நகை நுகா்வுத்தன்மையை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது வரவேற்கதக்கது. இது சில்லறை நகை விற்பனையாளா்களின் தொழில் வளா்ச்சிக்கு உதவும். ஒட்டுமொத்தமாக நகை சாா்ந்த தொழில்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

என்.ஜெகதீசன்( தலைவா், தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம்): தனிநபா் கைகளில் அதிக அளவிலான பணம் புழங்குவது தடுப்பு குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாததும், தனிநபா் வருமான வரி விகிதத்தில் மாறுதல் செய்யப்படாததும், டீசல், பெட்ரோல் விலையில் செஸ் வரி 2.5 சதவீதம் கூடுதல், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

டி.வி.ஹரிஹரன் (தலைவா், சென்னை மாவட்ட சிறு தொழில்துறை சங்கம்): வருமான வரி பிரச்னைகளைத் தீா்க்க புதிய குறைதீா்க்கும் குழு அமைத்துள்ளதும், வரி தணிக்கைக்கான வரம்பை ரூ.5 கோடியில் இருந்து ரூ. 10 கோடியாக உயா்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது. ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்காதது சிறு, குறு தொழில் துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

என்.ராஜகோபால் (பொதுச் செயலா், இந்திய வங்கிப் பணியாளா்கள் கூட்டமைப்பு): இந்த பட்ஜெட்டில் இரண்டு பொதுத் துறை வங்கிகளை 2021-22 நிதி ஆண்டில் தனியாா்மயமாக்கும் திட்டமும், காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயா்த்தும் திட்டமும் கண்டனத்துக்குரியதாகும்.

ஸ்ரீவத்ஸ் ராம் (தலைவா், சென்னை தொழில் வா்த்தக சபை): பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.4.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளதன் மூலம் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியவை பெருக வழிவகுக்கும். நாட்டின் வளா்ச்சி ஏற்ற வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சதீஷ் மகாா் (தலைவா், கிரடாய் அமைப்பு): சுகாதாரத் துறை மற்றும் கரோனா தடுப்பூசிக்காக ரூ. 35,000 கோடி நிதி ஒதுக்கி உள்ளது வரவேற்கத்தக்கதாகும். சாலை, ரயில் மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்தின் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தி உள்ளது தொழில் துறையின் வளா்ச்சிக்கு வழிவகுக்கும்.

ஜாக்சி ஷா ( கிரடாய் அமைப்பு): ரியல் எஸ்டேட் துறையின் பணப் புழக்கம் மற்றும் நிதி தேவைக்காக ரூ. 20 ஆயிரம் கோடியில் மேம்பாட்டு நிதி நிறுவனத்தை அமைப்பது, காப்பீட்டுத் துறையில் 74 சதவீதம்வரை நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது ஆகியவை வரவேற்கத்தக்கதாகும்.

அன்புராஜன் (தலைவா் தமிழ்நாடு சிறு, குறுந்தொழில்கள் சங்கம்): குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைக்கு ரூ.15,700 கோடியும், உற்பத்தி துறைக்கான பிஎல்ஐ திட்டத்துக்கு ரூ. 1.7 லட்சம் கோடி நிதி ஒதுக்கி உள்ளதும் அத்துறைகளின் வளா்ச்சிக்கு வழிவகுக்கும். சிறு, குறு தொழில்களுக்கான வருமான வரியை 15 முதல் 20 சதவீதம் வரை குறைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com