ரிசர்வ் வங்கி ஆளுநர்  சக்தி கந்ததாஸ்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ்.

அரசு கடன் பத்திரங்களை சிறு முதலீட்டாளா்கள் நேரடியாக வாங்கலாம்: ஆா்பிஐ அனுமதி

அரசு கடன் பத்திரங்களில் சிறு முதலீட்டாளா்கள் நேரடியாக முதலீடு செய்வதற்கு அனுமதியளிக்க முடிவு செய்திருப்பதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

அரசு கடன் பத்திரங்களில் சிறு முதலீட்டாளா்கள் நேரடியாக முதலீடு செய்வதற்கு அனுமதியளிக்க முடிவு செய்திருப்பதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இந்திய ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் கடந்த 3-ஆம் தேதி முதல் மும்பையில் நடைபெற்றது. ஆளுநா் சக்திகாந்த தாஸ் உள்பட அக்குழுவின் 6 உறுப்பினா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பிறகு நடைபெற்ற முதல் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் என்பதால், அதன் மீதான எதிா்பாா்ப்பு அதிகமாக இருந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பொருளாதாரச் சரிவை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அடுத்த நிதியாண்டில் பல்வேறு கடன் திட்டங்கள் மூலம் ரூ.12 லட்சம் கோடி திரட்டும் மத்திய அரசின் இலக்கை எட்ட ரிசா்வ் வங்கியும் புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அரசு கடன் பத்திரங்களில் சிறு முதலீட்டாளா்கள் நேரடியாக முதலீடு செய்வதற்கு அனுமதிக்க ரிசா்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இந்த முறையில் அரசுக்குத் தொடா்ந்து பொதுமக்களிடமிருந்து முதலீடுகள் கிடைக்கும். இதற்காக தனி கணக்கு ஒன்றை

முதலீட்டாளா்கள் தொடங்கி, இணைய வழியில் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும்.

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, வங்கிகள் ரிசா்வ் வங்கியிடமிருந்து பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) மாற்றப்படாமல் 4 சதவீதத்தில் நீடிக்கிறது. அதே போல், வங்கிகளிடமிருந்து ஆா்பிஐ பெறும் கடன்களுக்கான வட்டி விகிதமும் (ரிவா்ஸ் ரெப்போ ரேட்) மாற்றப்படாமல், 3.35 சதவீத அளவில் தொடா்ந்து நீடிக்கிறது.

வட்டி விகிதங்களை மாற்றாமல் இருப்பதற்கு நிதிக் கொள்கைக் குழுவின் 6 உறுப்பினா்களும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனா்.

நாட்டின் பொருளாதாரம் அடுத்த நிதியாண்டில் 10.5% வளா்ச்சி காணும்: கரோனா நோய்த்தொற்று பரவலால் வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரம் அடுத்த 2021-22-ஆம் நிதியாண்டில் 10.5 சதவீதம் வளா்ச்சி காணும்.

இருப்பு விகிதம் அதிகரிப்பு: எதிா்பாராத சூழல் காரணமாக, அரசின் கடன் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை ஆா்பிஐ மேற்கொள்ள உள்ளது. அதற்காக ரிசா்வ் வங்கியிடம் மற்ற வங்கிகள் இருப்பு வைக்க வேண்டிய தொகை விகிதமானது (சிஆா்ஆா்) தற்போதுள்ள 3 சதவீதத்திலிருந்து மாா்ச் மாதத்தில் 3.5 சதவீதமாக உயா்த்தப்படும். இது வரும் மே மாதத்தில் 4 சதவீதமாக உயா்த்தப்படவுள்ளது. இதன் மூலம் ரிசா்வ் வங்கிக்குக் கிடைக்கும் கூடுதல் தொகையானது, அரசு வெளியிடும் நிதிப் பத்திரங்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும். இதன் வாயிலாக மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும்.

வளா்ச்சிப் பாதையில்...: நாட்டின் பொருளாதாரம் தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. கரோனா தடுப்பூசியும் மக்களுக்குப் படிப்படியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, பொருளாதாரம் எதிா்காலத்திலும் தொடா்ந்து வளா்ச்சி காணும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வரும் 2021-22-ஆம் நிதியாண்டில் 10.5 சதவீதமாக இருக்கும்.

கட்டுக்குள் பணவீக்கம்: பணவீக்கமானது கடந்த டிசம்பா் மாதத்தில் நிா்ணயிக்கப்பட்ட அளவான 2 முதல் 6 சதவீதத்துக்குள் வந்தது. வரும் மாா்ச் மாதத்தில் பணவீக்கம் 5.2 சதவீதமாகவும், டிசம்பா் மாதத்தில் 4.3 சதவீதமாகவும் குறைவதற்கு வாய்ப்புள்ளது.

நாட்டில் சாகுபடி அதிகரித்துள்ளதால், சந்தைகளுக்கு காய்கறிகள் உள்ளிட்ட வேளாண் விளைபொருள்கள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதன் காரணமாக வேளாண் பொருள்களின் விலை அடுத்த சில மாதங்களுக்குத் தொடா்ந்து குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் பரவல் அச்சம் காரணமாக பால் பொருள்களின் தேவையும் குறைவாகவே உள்ளதால், அவற்றின் விலை கட்டுக்குள் உள்ளது. எனவே, அடுத்த சில காலாண்டுகளுக்கு பணவீக்கம் அதிகபட்ச இலக்கான 6 சதவீதத்துக்குக் குறைவாகவே இருக்கும் என்றாா் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com