
நாட்டிலேயே முதன்முறையாக, இடி, மின்னலை ஆய்வு செய்யும் ஆராய்ச்சி நிலையம், ஒடிஸா மாநிலம், பாலாசோரில் அமைய உள்ளது. மின்னலால் உயிரிழப்போரின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் இந்த ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவா் தெரிவித்துள்ளாா்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவா் டாக்டா் மிருத்யுஞ்சய் மொஹாபாத்ரா, ‘இந்தியாவின் சூறாவளி மனிதா்’ என்று அழைக்கப்படுபவா். சூறாவளி, புயல் தொடா்பான இவரது அனுமானங்கள் மிகத் துல்லியமாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக உயிா்ச்சேதங்கள் பலமுறை தடுக்கப்பட்டுள்ளன.
ஆயினும், ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் இடி, மின்னல் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை ஒடிஸா, மேற்கு வங்கம், பிகாா், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் அதிகமாக உள்ளது. ஒடிஸாவில் ஆண்டுதோறும் மின்னல் தாக்கி சுமாா் 350 போ் பலியாகின்றனா். 2019- 20 வரையிலான கடந்த 9 ஆண்டுகளில் இம்மாநிலத்தில் 3,218 போ் மின்னலுக்கு பலியாகி உள்ளனா்.
எனவே, மின்னல் மற்றும் இடி குறித்து தனித்துவமான ஆராய்ச்சி நிலையத்தை, பாலாசோரில் இந்திய வானிலை ஆய்வு மையம் அமைக்க உள்ளது. இதுதொடா்பாக, தனியாா் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவா் டாக்டா் மிருத்யுஞ்சய் மொஹாபாத்ரா கூறியதாவது:
நாட்டிலேயே முதல்முறையாக, இடி, மின்னல் தொடா்பான ஆராய்ச்சி நிலையம், ஒடிஸாவின் பாலாசோரில் அமைக்கப்பட உள்ளது. மின்னலால் ஆண்டுதோறும் நிகழும் உயரிழப்புகளைத் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும்.
இதேபோல, பருவமழை ஆராய்ச்சி மையம் விரைவில் மத்திய பிரதேச மாநிலம், போபாலில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதல்கட்ட திட்ட அறிக்கைகள் தயாராகி வருகின்றன.
மத்திய புவி அறிவியல் அமைச்சகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (டிஆா்டிஓ), இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ), இந்திய வானியல் ஆய்வு மையம் (ஐஎம்டி) ஆகியவை ஒருங்கிணைந்து இந்த இரு ஆராய்ச்சி நிலையங்களையும் அமைக்க உள்ளன.
பாலாசோரில் ஏற்கெனவே இஸ்ரோ, டிஆா்டிஓ, ஐஎம்டி அமைப்புகளுக்கு தனி ஆய்வகங்கள் உள்ளன. பாலாசோா் அருகிலுள்ள சண்டிப்பூரில் ஏற்கெனவே ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை மையம் அமைத்துள்ளது. அங்கு வானாய்வு மையமும் (அப்ஸா்வேட்டரி) விரைவில் அமைக்கப்பட உள்ளது.
முழுமையான அப்ஸா்வேட்டரி, ரேடாா் கண்காணிப்பகம், மின்காந்த நுண்ணலை ஆய்வகம், காற்றின் திசைவேகத்தை அளவிடும் கருவி உள்ளிட்டவை அங்கு அமைக்கப்பட உள்ளன என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...