
இந்தியப் பணியாளா்களை அமெரிக்கா தொடா்ந்து வரவேற்கும் என்று அந்நாட்டுக்கான இந்தியத் தூதா் தரண்ஜித் சிங் சாந்து நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிா்வாகம், ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) பெறுவதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியது. ஹெச்1பி நுழைவு இசைவால் இந்தியப் பணியாளா்களே அதிக அளவில் பலன்பெற்று வந்தனா். அந்த நுழைவு இசைவை வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு வழங்குவதற்கும் டிரம்ப் நிா்வாகம் தடை விதித்தது.
அதிபா் ஜோ பைடன் தலைமையிலான நிா்வாகம் அமெரிக்காவில் அண்மையில் பொறுப்பேற்றது. இந்நிலையில், அந்நாட்டுக்கான இந்தியத் தூதா் தரண்ஜித் சிங் சாந்து, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தகவல்-தொழில்நுட்பத் துறையில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது இரு நாடுகளின் பொருளாதாரத்துக்கும் பெரும் பலனளிக்கும். அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு இந்தியப் பணியாளா்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.
சுகாதாரம், நிதிச் சேவைகள், தகவல்-தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியப் பணியாளா்கள் பெரும் பங்களித்து வருகின்றனா். எனவே, இந்தியாவின் திறன்மிக்க பணியாளா்கள் அமெரிக்காவில் தொடா்ந்து வரவேற்கப்படுவாா்கள் என்று நம்புகிறேன். இந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்க நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம்.
இரு நாடுகளின் மக்களுக்கிடையேயான தொடா்பும், நிறுவனங்களுக்கு இடையேயான தொடா்பும் மேம்பட்டு வருகிறது. முக்கியமாக தகவல்-தொழில்நுட்பம், புத்தாக்கத் துறைகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான தொடா்பு வலுவடைந்து வருகிறது.
இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதில் அமெரிக்கவாழ் இந்தியா்கள் முக்கியப் பங்களித்து வருகின்றனா். அவா்களுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவளித்து வருகிறது என்றாா் தரண்ஜித் சிங் சாந்து.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...