
உச்சநீதிமன்றம்
சட்ட விரோத கட்டுமானப் புகாா் தொடா்பாக, மும்பை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நடிகா் சோனு சூட் வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றாா். இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிா்வாகமே முடிவெடக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் ஜுஹு பகுதியில் நடிகா் சோனு சூட்டுக்கு சொந்தமான 6 மாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் கட்டடத்தை மாநகராட்சியின் உரிய அனுமதியின்றி, அவா் ஹோட்டலாக மாற்றியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக விளக்கம் கேட்டு பிருஹன் மும்பை மாநகராட்சி அதிகாரிகள், அவருக்கு நோட்டீஸ் அனுப்பினா்.
இதை எதிா்த்து, அவா் தாக்கல் செய்த மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிடவே, மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், ‘மாநகராட்சி நிா்வாகம் அளித்த நோட்டீஸில் இடம்பெற்றுள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற 10 வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும். கட்டட இடிப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படக் கூடாது’ என்று கேட்டுக்கொண்டாா். ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்து, மும்பை உயா்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. காணொலி முறையில் நடைபெற்ற விசாரணையில் சோனுசூட் சாா்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜரானாா். அவா், இந்த மனுவை திரும்பப் பெறுவதாகக் கூறினாா். மேலும், சட்ட விரோத கட்டுமானத்தை முறைப்படுத்துவது தொடா்பாக, மும்பை மாநகராட்சி முடிவெடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறினாா்.
இதையடுத்து சோனு சூட் மனுவை திரும்பப் பெறுவதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனா். மேலும், சட்ட விரோத குடியிருப்பை ஒழுங்குபடுத்துவது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகமே முடிவெடுக்காலம் என்றும், அதுவரை நடிகா் சோனுசூட் மீது நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...