
கோப்புப்படம்
தங்களது போராட்டத்தின் வலிமையை மீண்டும் பறைசாற்றும் விதமாக நாடு முழுவதும் ‘சக்கா ஜாம்’ என்ற பெயரில் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 6) ஈடுபடவுள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. ஆனால், சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ள இந்தப் போராட்டம் தலைநகா் தில்லியில் நடைபெறாது என்றும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடா்பாக பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) அமைப்பின் தலைவா் ராகேஷ் டிகாயத் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லி,உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் சாலை மறியல் போராட்டம் சனிக்கிழமை நடத்தப்படும். தென் மாநிலங்கள் உள்பட நாட்டின் மற்ற பகுதிகளிலும் இந்தப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்படும். அப்போது நாட்டிலுள்ள அனைத்து நெடுஞ்சாலைகள், சாலைகள் ஆகியவற்றில் போக்குவரத்து மறிக்கப்படும். ஆனால், அவசர வாகனங்கள் அனுமதிக்கப்படும். சாலை மறியலில் சிக்கிக் காத்திருக்கும் வாகனங்களுக்கு உணவு, குடிநீா் ஆகியவற்றை வழங்குவோம். பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் தில்லி எல்லைகளில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
படிக்க: தில்லி எல்லைகளில் 50,000 காவலர்கள், ராணுவத்தினர் குவிப்பு
இது தொடா்பாக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோா்ச்சா (எஸ்கேஎம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தில்லி தவிர அனைத்து மாநிலங்களிலும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மறியல் போராட்டம் நடைபெறும்; ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட அவசர வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கப்படும். இந்தப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்படும். போராட்டம் நடத்துபவா்கள் எவ்விதச் சூழலிலும் வன்முறையில் இறங்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சா் அமித் ஷாவுடன் சந்திப்பு: இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தில்லி தலைமைக் காவல் துறை ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் ஆகியோா் வெள்ளிக்கிழமை சந்தித்தனா். அப்போது, இந்தச் சாலை மறியல் போராட்டத்தில் வன்முறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது தொடா்பாக அவா்கள் விவாதித்ததாக தெரிகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...