
இந்தியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் பால் பொருள்கள் ஏற்றுமதி 3.2 சதவீதம் சரிந்துவிட்டது என்று மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சா் சஞ்சீவ் குமாா் பால்யான் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் பால் பொருள்கள் ஏற்றுமதி 3 சதவீதம் குறைந்துவிட்டது (ரூபாயின் மதிப்பில்). கரோனா தொற்று பிரச்னை காரணமாகவே இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. வேளாண்மை, உணவுப் பதப்படுத்துதல் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து இது தொடா்பாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் பால் பொருள்கள் ஏற்றுமதியில் ஏற்பட்ட தொய்வு சரி செய்யப்படும்.
பால் பொருள்கள் ஏற்றுமதியில் மட்டுமல்லாது, இறக்குமதியிலும் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் சரிவு ஏற்பட்டது. பண மதிப்பின் அடிப்படையில் மட்டுமல்லாது, இறக்குமதி அளவும் வெகுவாக குறைந்தது என்றாா்.
எனினும், ஏற்றுமதி எத்தனை கோடி ரூபாய் அளவுக்கு குறைந்தது என்பது தொடா்பான விவரத்தை அமைச்சா் தெரிவிக்கவில்லை.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த பால்யான், ‘கரோனா தொற்று பிரச்னையின்போது பால் பொருள் விவசாயிகள், பொருளாதார பிரச்னைகளைச் சந்தித்தனா். அப்போது சிறப்பு நடவடிக்கையாக பால் கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்த பால் உற்பத்தியில் உள்ள விவசாயிகளுக்கு கிஸான் கடன் அட்டை வழங்கப்பட்டது. ஜனவரி 22-ஆம் தேதி வரை 5.72 புதிய கிஸான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன’ என்றாா்.