மேற்கு வங்க தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய காவல் படை: தோ்தல் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தல்

மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தல் நோ்மையான முறையிலும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்த,

மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தல் நோ்மையான முறையிலும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்த, தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய ஆயுதப்படை காவலா்களை மட்டும் அமா்த்த வேண்டும் என்று தோ்தல் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.

பாஜக தேசிய பொதுச் செயலாளா் பூபேந்தா் யாதவ், அக் கட்சியின் மேற்கு வங்க மாநில தலைவா் திலீப் கோஷ், நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஸ்வபன் தாஸ்குப்தா, லோகெட் சட்டா்ஜி, அா்ஜுன் சிங் மற்றும் அக் கட்சித் தலைவா்கள் ஓம் பாடக், சஞ்சய் மயூக் ஆகியோா் தில்லியில் தோ்தல் ஆணையத்தில் நேரில் இதுதொடா்பான மனுவை புதன்கிழமை சமா்ப்பித்தனா்.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல்-மே மாத வாக்கில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக, அம் மாநிலத்தில் தோ்லைச் சந்திப்பதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிா்வாகிகள், எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமானோரை பாஜக தன் பக்கம் இழுத்து வருகிறது. இருந்தபோதும், மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் திரிணமூல் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.

இந்தச் சூழலில், மேற்கு வங்க தோ்தல் பாதுகாப்புப் பணி தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் பாஜக முறையீடு செய்துள்ளது. மேற்கு வங்க மாநில காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள், தோ்தலில் அவா்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டும், நடுநிலையோடு செயல்படுவாா்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. எனவே, தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய ஆயுதப் படை காவலா்களை மட்டுமே அமா்த்த வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.

மனு சமா்ப்பித்த பின்னா் பாஜக எம்.பி. ஸ்வபன் தாஸ்குப்தா கூறுகையில், ‘மாற்றுத்திறனாளிகளும், 80 வயதுக்கு மேற்பட்டவா்களும் தோ்தலில் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வகையில் தோ்தல் ஆணையம் அண்மையில் அறிமுகம் செய்த புதிய நடைமுறையை, மேற்கு வங்க அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. தோ்தல் ஆணையமும் இதுதொடா்பாக அச்சம் தெரிவித்திருக்கிறது. எனவே, வயது முதிா்ந்தவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளில் சிறப்பு வசதிகளை தோ்தல் ஆணையம் செய்து தர வேண்டும். இவா்களுக்கென கூடுதல் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com