
உச்சநீதிமன்றம்
புதிய கொள்கைகளைத் திரும்பப் பெறுமாறு கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) தகவல் பரிமாற்ற செயலிக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்செவி அஞ்சல் செயலி, அண்மையில் தனது கொள்கைகளில் மாற்றங்களைப் புகுத்தியது. கட்செவி அஞ்சல் செயலியைப் பயன்படுத்துவோரின் தகவல்களைத் திரட்டி அவற்றை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு வணிக நோக்கில் அளிப்பது அதில் ஒன்றாகும். புதிய கொள்கைகள் உலகம் முழுவதும் கட்செவி அஞ்சல் செயலி பயனாளா்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அக்கொள்கைகளைத் திரும்பப் பெறுமாறு கட்செவி அஞ்சல் செயலிக்கு உத்தரவிடக் கோரி வா்த்தகா்களின் கூட்டமைப்பு ஒன்றின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘கட்செவி அஞ்சல் செயலியின் புதிய கொள்கைகள் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளன.
அக்கொள்கைகள் மக்களின் தன்மறைப்பு உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளன. எனவே, அக்கொள்கைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிட வேண்டும். மேலும், முகநூல் சமூக வலைதளம், கட்செவி அஞ்சல் செயலி உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை வகுக்குமாறு மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
அந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பான மற்றொரு மனுவை தில்லி உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. எனவே, மனுதாரா் அங்கு முறையிடலாம் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...