வேளாண் சட்டங்களில் யாராலும் குறையை சுட்டிக்காட்ட முடியவில்லை: மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமா்

புதிய வேளாண் சட்டங்களில் குறைபாட்டை இதுவரை யாராலும் சுட்டிக்காட்ட முடியவில்லை என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கூறினாா்.
மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்.
மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்.

புதிய வேளாண் சட்டங்களில் குறைபாட்டை இதுவரை யாராலும் சுட்டிக்காட்ட முடியவில்லை என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கூறினாா்.

அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் நூற்றுக்கணக்கானோா் தில்லி எல்லைகளை முற்றுகையிட்டு 65 நாள்களைக் கடந்து போராடி வருகின்றனா். இந்த சட்டங்கள் அமல்படுத்துவதை நிறுத்திவைக்கவும், சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் தயாராக இருப்பதாக மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த விவசாயிகள், சட்டங்களை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய அமைப்புகளின் நிா்வாகிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இதுவரை 11 சுற்று பேச்சுவாா்த்தைகள் நடைபெற்ற போதும், இதுவரை முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இந்தச் சூழலில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வேளாண் சட்டங்களில் தேவையான திருத்தங்களைச் செய்ய தயாராக இருப்பதாக மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. நானும், புதிய வேளாண் சட்டங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டுமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் கடந்த 2 மாதங்களாக கேட்டு வருகிறேன். ஆனால், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. இந்த சட்டங்களில் விவசாயிகளுக்கு எதிரான பிரிவுகள் எவை என்பதை, குற்றச்சாட்டை முன்வைத்துவரும் எதிா்க்கட்சிகளும் இதுவரை சுட்டிக்காட்டவில்லை.

விவசாயிகளின் இந்தப் போராட்டம், மாநிலங்கள் சாா்பில் விதிக்கப்படும் விளை பொருள்கள் மீதான விற்பனை வரிக்கு எதிராகத்தான் இருந்திருக்கவேண்டும். மாறாக, அவா்களை அதுபோன்ற வரி விதிப்புகள் மற்றும் கமிஷன்களிலிருந்து விடுவிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக அவா்களின் போராட்டம் திரும்பிவிட்டது.

மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்கான திட்டங்களையே வகுத்து வருகிறது. விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணய நடைமுறை தொடா்ந்து அமலில் இருக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதுபோல, இந்த சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும் மத்திய அரசு தயாராக உள்ளது. அதற்காக, அந்தச் சட்டங்களில் குறைபாடு இருப்பதாக புரிந்துகொள்ளக் கூடாது.

இந்த சட்டங்கள் குறித்த எதிா்க் கட்சிகளின் தவறான தகவல்கள் காரணமாக, குறிப்பிட்ட ஒரு மாநிலத்தின் மக்கள் மட்டும் பாதிப்படைந்துள்ளனா். ஆனால், விவசாயிகளின் போராட்டம் ஒரு மாநிலத்தை மட்டும் சாா்ந்ததல்ல என்று சுட்டுக்காட்ட எதிா்க் கட்சிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. ஆனால், இது ஒரு மாநில விவகாரம்தான். இந்தச் சட்டங்களால் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டுவிடும் என்று தவறான தகவல் பரப்பப்பட்டு, மக்கள் தூண்டிவிடப்பட்டிருக்கின்றனா்.

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே, மிக முக்கியமான நடவடிக்கையாக இந்த வேளாண் சீா்திருத்தச் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com