லடாக் விவகாரத்தில் சீனாவுடனான பேச்சுவாா்த்தை தொடரும்

லடாக் எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் சீனாவுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

லடாக் எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் சீனாவுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. அங்கு குவிக்கப்பட்டுள்ள படைகளை இரு நாடுகளும் திரும்பப் பெறவில்லை.

எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இதுவரை 9 சுற்று பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன. இத்தகைய சூழலில், அமைச்சா் ஜெய்சங்கா், ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடாவில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பான பேச்சுவாா்த்தை சிக்கல் நிறைந்தது. ஏனெனில், நிலஅமைப்பு, நாட்டின் நிலைப்பாடு உள்ளிட்டவற்றை ஆராய்ந்து இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியுள்ளது. அதை ராணுவத் தளபதிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்தியா-சீனா ராணுவங்களின் துணைத் தளபதிகள் இடையே இதுவரை 9 சுற்று பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன. அவற்றின் வாயிலாக சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை.

கடந்த ஆண்டு சீனாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சா்களை சந்தித்துப் பேசியபோது, லடாக்கின் சில பகுதிகளில் மட்டும் படைகளை இருதரப்பினரும் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. தற்போதைய சூழலில், இரு நாடுகளின் ராணுவத் தளபதிகள் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். அப்பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெறும்.

மூலதன செலவு: அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்புத் துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மூலதன செலவுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மூலதன செலவுக்கான நிதி 18 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பது, நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த சுமாா் 40 லட்சம் இந்தியா்கள் 17,000 விமான சேவைகள் மூலமாக தாயகம் அழைத்து வரப்பட்டனா். வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா வந்த பணியாளா்கள், தற்போது அந்நாடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனா்.

கரோனா தடுப்பூசி: இதுவரை சுமாா் 15 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது. மேலும் 25 நாடுகள் இந்தியாவிடமிருந்து தடுப்பூசிகளைக் கோரியுள்ளன. சில ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

சில நாடுகள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்யும் அதே விலையில், கரோனா தடுப்பூசிகளை வாங்கிக் கொண்டன. சில நாடுகள் தடுப்பூசிகளைப் பெறுவதற்காக, அந்நிறுவனங்களிடம் நேரடியாக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன என்றாா் ஜெய்சங்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com