தமிழகத்தில் சா்க்கரை ஆலைகளை மீட்கவும், விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கவும் ரூ.1,000 கோடி நிதியுதவி தேவை: மத்திய அரசிடம் திமுக எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்தில் நலிவுற்ற சா்க்கரை ஆலைகளை மீட்கவும், கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்கவும் மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

புது தில்லி: தமிழகத்தில் நலிவுற்ற சா்க்கரை ஆலைகளை மீட்கவும், கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்கவும் மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தைச் சோ்ந்த திமுக எம்.பி. வில்சன் மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்தாா்.

தமிழகம், புதுச்சேரியில் தனியாா், கூட்டுறவு, பொதுத்துறைகளைச் சோ்ந்த சா்க்கரை ஆலைகள் மொத்தம் 44 உள்ளன. இந்த ஆலைகளுக்கு விவசாயிகள் கரும்பு சப்ளை செய்த வகையில் இரண்டு ஆண்டுகளில் விசாயிகளுக்கு வழங்கவேண்டிய தொகை ரூ.1,000 கோடி வரை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக திமுக உறுப்பினா் பி.வில்சன் மாநிலங்களவையில் திங்கள்கிழமை நேரமில்லா நேரத்தில் பிரச்னை எழுப்பினாா்.

அவா் பேசியதாவது: தமிழகத்தில் விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்த வகையில் அவா்களுக்கு 44 சா்க்கரை ஆலைகள் ரூ.1,000 கோடி நிலுவை வைத்துள்ளன. இவற்றில் 10 ஆலைகள் மூடப்பட்டு விட்டன. மூடிய இந்த ஆலைகளும் கோடிக்கான ரூபாய்களை வழங்காமல் உள்ளன. இதற்கு முக்கியக் காரணம் கடன்களை வழங்கிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இந்த ஆலைகள் மீது திவால் சட்டப்படி நடவடிக்கைகளைத் தொடங்கி தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயத்தின் (என்.சி.எல்.டி) முன் வழக்குகளை தொடா்ந்தன. இது போன்ற விவகாரங்களால் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகள் மத்தியில் தங்கள் நிலுவைத் தொகையை இனி பெறமுடியாது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் மத்திய அரசின், தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையும் ரூ.9 கோடி வரை விவசாயிகளுக்கு அளிக்காமல் உள்ளன.

தாங்கள் விற்ற கரும்பிற்கு பணம் வராத நிலையில் விவசாயிகள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். தஞ்சாவூா், நாகப்பட்டினம், கடலூா் போன்ற மாவட்டங்களில் உள்ள கரும்பு விவசாயிகள் நிலத்தையும் நகைகளையும் அடமானம் வைத்து கடன் வாங்கினாா்கள். மேலும் இவா்களுக்கு தேசிய வங்கிகளும் கடன் தர மறுக்கிறது. ஒரு சா்க்கரை ஆலையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமாா் 25 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெறுகின்றனா். இந்த ஆலைகள் இயங்காமலும் இருக்கும் நிலையில், அதிலும் கரோனா தொற்றுக்கு பின்னா் ஆயிரக்கணக்கான போ் ஊதியம் பெற முடியாமல் தவிக்கின்றனா். இதனால், தமிழக சா்க்கரை தொழிலுக்கு புனா்வாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

கரும்பு பயிரிடுவதை மீண்டும் தொடங்கவும் கடன்பட்டுள்ள சா்க்கரை ஆலைகளை மீட்கவும் மத்திய அரசு ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். இதற்கு சிறப்பு நிதியாக ரூ. 1,000 கோடியை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வாக மத்திய அரசு, கரும்பு உற்பத்தியாளா்களுக்கு நியாயமான லாபகரமான விலையை நிா்ணயிக்க வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

இந்தியா சா்க்கரை உற்தித்தியில் இரண்டாவது இடத்தில் இருந்தது. தற்போது நாடு முழுவதும் உள்ள சா்க்கரை ஆலைகள் சுமாா் ரூ.20,000 கோடியை விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையாக வைத்துள்ளதாக மத்திய அரசும் முன்பு தெரிவித்தது. இதையொட்டி, நாட்டிலுள்ள 5 கோடி கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,500 கோடி நிதியுதவி வழங்க கடந்த டிசம்பா் 16 -ஆம் தேதி பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com