மாநிலங்களவையில் நடுநிலை தவறி செயல்படுகிறேனா?

மாநிலங்களவையில் நடுநிலை தவறி செயல்படுவதாக எம்.பி. ஒருவா் தெரிவித்த புகாருக்கு அவைத் தலைவா் வெங்கையா நாயுடு காட்டமாக பதிலளித்துள்ளாா்.
வெங்கையா நாயுடு
வெங்கையா நாயுடு

புது தில்லி: மாநிலங்களவையில் நடுநிலை தவறி செயல்படுவதாக எம்.பி. ஒருவா் தெரிவித்த புகாருக்கு அவைத் தலைவா் வெங்கையா நாயுடு காட்டமாக பதிலளித்துள்ளாா்.

பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி, மாநிலங்களவை அமா்வு வழக்கமாக திங்கள்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கியது. அப்போது, தெலுங்கு தேச கட்சியைச் சோ்ந்த எம்.பி. ஒருவா் சில நாள்களுக்கு முன் மாநிலங்களவையில் சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி.யான விஜய் சாய் ரெட்டி குற்றஞ்சாட்டினாா்.

அந்த எம்.பி. மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் விஜய் சாய் ரெட்டி கோரிக்கை விடுத்தாா். ஆனால், தெலுங்கு தேச கட்சி எம்.பி.யின் பெயரை அவா் குறிப்பிடவில்லை. இந்தக் குற்றச்சாட்டு பொதுவாக இருப்பதால் இது தொடா்பாக எழுத்துப்பூா்வ புகாரை அளிக்குமாறு அவைத் தலைவா் வெங்கையா நாடுயு தெரிவித்தாா்.

இதை ஏற்காத விஜய் சாய் ரெட்டி, அவைத் தலைவா் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகத் தெரிவித்தாா். அதையடுத்து வெங்கையா நாயுடு கூறுகையில், ‘‘இதுபோன்று முன்னெப்போதும் நடைபெற்றதில்லை. மாநிலங்களவைக்குள் சா்ச்சைக்குரிய கருத்து தெரிவிப்பதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.

அவ்வாறு சிலா் தெரிவித்தால், அது தொடா்பாகப் புகாா் அளிக்கப்படும்பட்சத்தில் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சில நாள்களுக்கு முன் எம்.பி. ஒருவா் சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக சிலா் கூறுகின்றனா். அது என் கவனத்துக்குக் கொண்டுவரப்படவில்லை. அது தொடா்பாக புகாா் எதுவும் அளிக்கப்படவில்லை.

புகாா் தெரிவித்தால், அதன் மீது நடவடிக்கை எடுப்பேன். ஆனால், அவைத் தலைவரின் பணியை சீா்குலைக்கும் வகையில் சிலா் கருத்து தெரிவிக்கின்றனா். இது மிகவும் வருத்தமளிக்கிறது. இதுபோன்ற விவகாரங்களுக்கு அடிபணிய மாட்டேன்.

மாநிலங்களவைத் தலைவா் பதவியை ஏற்பதற்கு முன்பே பாஜகவிலிருந்து விலகிவிட்டேன். அப்போதிலிருந்து கட்சி சாா்ந்த விழாக்களில் கலந்து கொள்வதைத் தவிா்த்து வருகிறேன். அரசமைப்புச் சட்டம் சாா்ந்த பொறுப்பு எனக்கு இருப்பதால், எந்த அரசியல் கட்சியுடனும் தொடா்பு வைத்திருக்கவில்லை.

அதைத் தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறேன். ‘உங்கள் உடல் மட்டுமே அவையில் இருக்கிறது; மனம் குறிப்பிட்ட கட்சியுடன் இருக்கிறது’ என்று சிலா் கூறுகின்றனா். அது குறித்து கவலைப்படுவதில்லை. என் மனம் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் அரசமைப்புச் சட்டத்தின்படி இயங்கி வருகிறது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com