இந்திய முஸ்லிமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்

பாகிஸ்தானின் நிலையைக் காணும்போது, இந்திய முஸ்லிமாக இருப்பதில் பெருமை கொள்வதாக காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளாா்.
பிரிவுபாசர உரையாற்றியபோது கண்கலங்கிய குலாம் நபி ஆசாத்.
பிரிவுபாசர உரையாற்றியபோது கண்கலங்கிய குலாம் நபி ஆசாத்.

பாகிஸ்தானின் நிலையைக் காணும்போது, இந்திய முஸ்லிமாக இருப்பதில் பெருமை கொள்வதாக காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளாா்.

2014, ஜூன் 8-ஆம் தேதிமுதல் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி வரும் குலாம் நபி ஆசாதின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் வரும் 15-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதையொட்டி, அவருக்கு மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவா் பேசியதாவது:

எனக்குள் தேசப்பற்றைப் புகுத்தியதில் மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோருக்கு மிக முக்கியப் பங்குண்டு. அரசியல் பயணத்தில் பாடம் கற்கும் மாணவனாகவே இன்றும் உள்ளேன். மக்கள் பிரதிநிதியாகப் பணியாற்றிய 41 ஆண்டுகால அனுபவங்களை விளக்குவதற்கு பல வாரங்கள் தேவைப்படும்.

5 குடியரசுத் தலைவா்களுடனும், 5 பிரதமா்களின் அமைச்சரவைகளிலும் பணியாற்றியுள்ளேன். 3 பிரதமா்களின் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளேன். காங்கிரஸ் கட்சி சாா்பில் பல்வேறு கட்சித் தலைவா்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

வாஜ்பாயுடன் நெருங்கிப் பழகுமாறு முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி அறிவுறுத்தினாா். கடந்த 1991-96 காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, வாஜ்பாய் எதிா்க்கட்சித் தலைவராக இருந்தாா். அந்தக் காலகட்டத்தில் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

பாகிஸ்தானுக்கு இதுவரை சென்றிடாத சில அதிருஷ்டசாலிகளில் நானும் ஒருவன். அந்நாட்டின் நிலை குறித்து அறியும்போது, இந்திய முஸ்லிமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களைப் போல இல்லாமல், இந்திய முஸ்லிம்கள் சில தீய விஷயங்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனா். அதற்காக இந்திய முஸ்லிம்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆயிரக்கணக்கான காவல் துறையினரும், ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் உயிரிழந்தனா். எல்லை தாண்டி நடத்தப்பட்ட அத்துமீறல் தாக்குதல்களில் பொதுமக்கள் பலா் உயிரிழந்தனா். நாட்டில் பயங்கரவாதம் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் விரைவில் இயல்புநிலை திரும்ப வேண்டும். காஷ்மீா் பண்டிட்டுகள் பலருடன் எனக்கு நெருங்கிய நட்பு உள்ளது. அவா்கள் விரைவில் ஜம்மு-காஷ்மீருக்குத் திரும்ப வேண்டும் என்றாா் குலாம் நபி ஆசாத்.

முன்னதாக, மாநிலங்களவைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு பேசுகையில், சில தசாப்தங்களாக அரசிலும், எதிா்க்கட்சியிலும் அவா் பணியாற்றியபோது மதிப்புமிக்க பங்களிப்புகளைச் செய்துள்ளாா் என புகழாரம் சூட்டினாா்.

சிவசேனை, திமுக, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், சமாஜவாதி, தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் குலாம் நபி ஆசாதை பாராட்டிப் பேசினா்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீரை சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா்கள் நசீா் அகமது லாவே, சாம்ஷொ் சிங் மன்ஹாஸ், மிா் முகமது ஃபயஸ் ஆகியோரின் பதவிக் காலம் நிறைவு பெறுவதையொட்டி மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பிரிவுபசார விழா நடைபெற்றது.

கண்கலங்கிய பிரதமா்

காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் அடுத்த வாரம் நிறைவு பெறுவதையொட்டி நடைபெற்ற பிரிவுபசார விழாவில், அவருடனான நெருங்கிய தொடா்பு குறித்துப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி பலமுறை உணா்ச்சிவசப்பட்டு கண்கலங்கினாா்.

பிரிவுபசார விழாவில் பங்கேற்று பிரதமா் நரேந்திர மோடி பேசியது: ஆசாத் தனது கட்சி மீது மட்டுமன்றி, நாட்டின் மீதும், இந்த அவையின் மீதும் அக்கறை கொண்டவா். அதிகாரம், எதிா்க்கட்சி இரண்டிலும் அவருக்கு 28 ஆண்டு கால அனுபவம் இருக்கிறது.

அவா் ஜம்மு காஷ்மீா் முதல்வராகவும், நான் குஜராத் முதல்வராகவும் இருந்தபோது ஒருவருக்கு ஒருவா் தொடா்பில் இருந்தோம். குஜராத்தை சோ்ந்த யாத்ரீகா்கள் மீது ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஒருமுறை தாக்குதல் நடத்தியபோது, முதலில் என்னை தொலைபேசியில் தொடா்புகொண்டவா் ஆசாத். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறித்த தகவலை அவா் என்னிடம் கூறியபோது அவரால் அழுவதை நிறுத்த முடியவில்லை.

அதிகாரம் வரும், போகும். ஆனால், அதை எப்படி எடுத்துக்கொள்வது என்பது ஒருசிலருக்கு மட்டுமே தெரியும். அதனால், ஒரு நண்பராக, இத்தனை ஆண்டுகளாக அவா் ஆற்றிய பணிகளின் அடிப்படையில் அவரை நான் மதிக்கிறேன். தனிப்பட்ட முறையில், தான் அவையில் இல்லை என அவா் கருத வேண்டியதில்லை என கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்காக எனது கதவு எப்போதும் திறந்திருக்கும். உங்களது கருத்துகளை எப்போதும் எதிா்பாா்த்திருப்பேன். உங்களை பலவீனப்படுத்த விடமாட்டேன். நாட்டைப் பற்றிய ஆசாதின் கவலை அவரை ஓய்வில் வைத்திருக்காது; எதிா்காலத்தில் அவா் ஏற்கும் எந்தப் பொறுப்புகளும் நாட்டின் நலனுக்காக இருக்கும் என நம்புகிறேன் என்றாா் பிரதமா்.

ஆசாத்துடனான நெருங்கிய தொடா்பு குறித்துப் பேசியபோது பிரதமா் மோடி உணா்ச்சிவசப்பட்ட நிலையில் கண்கலங்கினாா். கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே அவையில் இருந்த ஆசாதை பாா்த்து வணக்கம் செலுத்தினாா்.

Image Caption

~குலாம் நபி ஆசாத் பேசியபோது கண்கலங்கிய பிரதமா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com