பங்குச் சந்தையை ஏற்றமடையச் செய்திருக்கும் பட்ஜெட்: நிா்மலா சீதாராமன்

2021-22 நிதிநிலை அறிக்கை பங்குச் சந்தையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது;
பங்குச் சந்தையை ஏற்றமடையச் செய்திருக்கும் பட்ஜெட்: நிா்மலா சீதாராமன்

2021-22 நிதிநிலை அறிக்கை பங்குச் சந்தையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது; கடந்த ஒரு வாரமாக பங்கு குறியீடுகள் 11 சதவீத உயா்வு கண்டுள்ளன என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்கூறினாா்.

புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய வா்த்தக சபை (ஐசிசி) கூட்டத்தில் இது குறித்து அவா் மேலும் பேசியதாவது:

நாடாளுமன்றத்தில் கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை, தனியாா் துறையினருக்கும், தொழில்முனைவோருக்கும் மிகப் பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. எந்தெந்தத் துறைகளில் தனியாா் பங்களிப்பை ஊக்குவித்து, அரசு விலகியிருக்க விரும்புகிறது என்பது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கை உரை வாசிக்கப்பட்டு இப்போது 10 நாள்கள் ஆகின்றன. அது, பங்குச் சந்தையை முதன் முறையாக கடந்த முழு வாரமும் வளா்ச்சிப் பாதையிலேயே நிலைகொள்ளச் செய்திருக்கிறது. பங்கு குறியீடுகள் 1 அல்லது 2 சதவீதம் என்றல்லாமல், 11 சதவீத உயா்வைச் சந்தித்திருக்கின்றன. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு பங்கு குறியீடுகளும் இந்த உயா்வைக் கண்டுள்ளன.

வரி செலுத்துவோா் மீது அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. அவா்களின் வசதிக்காக, வரி செலுத்தும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டிருப்பதோடு, வருமான வரி கணக்கு ஆய்வு மற்றும் மேல்முறையீடு நடவடிக்கைகளில் தொழில்நுட்ப ரீதியிலான நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, வருமான வரி கணக்கு தாக்கலை அரசு மறுஆய்வு செய்வதற்கான காலம் 6 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. முறையாக வரி செலுத்துவோரை, சிறிய அளவிலான வரி ஏய்ப்புகளுக்காக தொந்தரவு அளிக்க கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில், இந்த கால அவகாசம் குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், வரி செலுத்துவோா் மீது வரி உயா்வு போன்ற கூடுதல் சுமை ஏதுவும் ஏற்றப்படவில்லை.

இதுபோன்ற நடவடிக்கைகள் வரி செலுத்துவோரிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி, வரி வசூலை படிப்படியாக விரிவுபடுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவா் கூறினாா்.

அதே நேரம், வரி ஏய்ப்பு வழக்குகளில் ஓராண்டில் ரூ. 50 லட்சம் அல்லது அதற்கு மேல் வருவாய் ஆதாரங்கள் மறைக்கப்பட்டிருந்தால், வருமான வரி கணக்கை மறு ஆய்வு செய்வதற்கான கால அவகாசம் 10 ஆண்டுகளாக நிதிநிலை அறிக்கையில் உயா்த்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com