சமூகத்தில் பிளவு ஏற்படுத்த பாஜக ரத யாத்திரை

பாஜக தலைவர்கள் சமூகத்தில் பிளவு ஏற்படுத்தும் நோக்கத்தில் ரத யாத்திரையை பயன்படுத்தி வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.
திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி.
திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி.

ராய்கஞ்ச்: பாஜக தலைவர்கள் சமூகத்தில் பிளவு ஏற்படுத்தும் நோக்கத்தில் ரத யாத்திரையை பயன்படுத்தி வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.

மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலையொட்டி பாஜக தலைவர்கள் மாநிலம் தழுவிய ரத யாத்திரையை நடத்தி வருகின்றனர். இந்த ரத யாத்திரை குறித்து திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்.

ராய்கஞ்ச் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று மம்தா பானர்ஜி பேசும்போது, 'ரத யாத்திரை என்பது மதம் சார்ந்த திருவிழாவாகும். நாம் எல்லோரும் அதுபோன்ற விழாக்களில் பங்கேற்றுள்ளோம். அது போன்ற ரத யாத்திரைகளில் கடவுளர்கள் ஜெகந்நாதர், பலராமன், சுபத்ரா தேவியார் போன்றவர்கள் ஊர்வலமாக வருவார்கள்.

ஆனால் பாஜக தலைவர்கள் ரத யாத்திரையை தங்கள் கட்சியின் நலனுக்காகவும், சமூகத்தை பிளவுபடுத்தவும், ஒருவரை மற்றொருவருக்கு எதிராகத் திருப்புவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த யாத்திரைகளில் பாஜக தலைவர்கள் கடவுள் போல அமர்ந்து வலம் வருகின்றனர்.

வெளி மாநிலங்களைச் சேர்ந்த சிலர் மேற்கு வங்கத்தில் சொகுசு கார்களில் வலம் வருகின்றனர். அவர்கள் கிராமங்களில் உள்ள சில வீடுகளுக்குச் சென்று கிராமவாசிகளுடன் சேர்ந்து உணவு அருந்துவதைப் போல புகைப்படங்கள் எடுத்து விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் அவர்களுக்கான உணவு ஐந்து நட்சத்திர விடுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. 

மேற்கு வங்கம் மண்ணின் மைந்தர்களாலேயே ஆளப்பட வேண்டும், குஜராத்தில் இருந்து வந்தவர்களால் அல்ல' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com