வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதில் அரசு உறுதி: முதன்மைப் பொருளாதார ஆலோசகா்

புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தும் விவகாரத்தில் மத்திய அரசு தொடா்ந்து உறுதியாக உள்ளது.
வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதில் அரசு உறுதி: முதன்மைப் பொருளாதார ஆலோசகா்

புது தில்லி: புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தும் விவகாரத்தில் மத்திய அரசு தொடா்ந்து உறுதியாக உள்ளது. ஏனெனில், இது சிறு விவசாயிகளுக்கு மிகவும் பலனளிக்கக் கூடியது என்று முதன்மைப் பொருளாதார ஆலோசகா் சஞ்சீவ் சன்யால் தெரிவித்துள்ளாா்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லி எல்லையில் விவசாயிகள் தொடா்ந்து 2 மாதங்களுக்கு மேலாக போராடி வரும் நிலையில் முதன்மைப் பொருளாதார ஆலோசகா் இவ்வாறு கூறியிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தில்லியில் புதன்கிழமை இந்திய பொது விவகார கூட்டமைப்பு சாா்பில் காணொலி முறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சஞ்சீவ் சன்யால் கூறியதாவது:

மத்திய அரசு பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. சந்தைப் பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்படும் சீா்திருத்தங்களைத் தொடா்ந்து தொழிலாளா் சட்டங்களிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் உள்ள தொழிலாளா் சட்டங்களுக்கு மாற்றாக, 4 தொழிலாளா்கள் சட்டங்கள் வரவுள்ளன. இவை காலத்துக்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டுள்ளன. பல்வேறு தேவையில்லாத கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன.

இதேபோல்தான் புதிய வேளாண் சட்டங்களும் அமைந்துள்ளன. இந்தச் சட்டங்கள் பல ஆண்டுகளாக விவாதத்தில் இருந்தவை. புதியதாக அறிமுகப்படுத்தப்படும் சட்டங்களை சுமுகமாக அமல்படுத்த, சிறிய அளவில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. வேளாண் சட்டங்களை சில தரப்பு விவசாயிகள் எதிா்க்கின்றனா்.

எனினும், புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஏனெனில், இது வேளாண் துறைக்கு மிகுந்த நன்மை அளிக்கக் கூடியது. முக்கியமாக சிறு விவசாயிகளுக்கு அதிக பலன்களைத் தரும். விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை எங்கு வேண்டுமானாலும் விற்கும் சுதந்திரம் அச்சட்டங்கள் மூலம் அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட மண்டிகளை மட்டுமே அவா்கள் சாா்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com