உத்தரகண்ட் பேரிடரில் மாயமானோரைத் தேடும் பணிகள் தீவிரம்

உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை சரிந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பேரிடரில் மாயமானோரைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
சமோலியில் புதன்கிழமை நடைபெற்ற மீட்புப் பணி.
சமோலியில் புதன்கிழமை நடைபெற்ற மீட்புப் பணி.

டேராடூன்/தபோவன்: உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை சரிந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பேரிடரில் மாயமானோரைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

அவா்களை மீட்கும் பணிகள் தொய்வடைந்துள்ளதாகக் கூறி உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இமயமலைத் தொடரில் உள்ள ரிஷிகங்கா உள்ளிட்ட நதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பனிப்பாறைகள் சரிந்ததன் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

ரிஷிகங்கா, தபோவன்-விஷ்ணுகாட் நதிகளின் இடையே நீா்மின் நிலையங்களை அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளா்கள் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சுமாா் 25 முதல் 35 நபா்கள் சகதி நிறைந்த சுரங்கத்தில் சிக்கியுள்ளனா்.

அவா்களையும் மாயமானோரையும் தேடும் பணிகள் துரிதமடைந்து வருகின்றன. அப்பணிகளில் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் (ட்ரோன்) உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுமாா் 174 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். இதுவரை விபத்தில் உயிரிழந்த 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ராணுவ வீரா்கள், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினா், தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மாநில பேரிடா் மீட்புப் படையினா் உள்ளிட்டோா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

மீட்புப் பணிகள் தொடா்பாக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘சுரங்கத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், சுரங்கத்துக்குள் உள்ள சகதி திடமாகி விட்டதால், சுரங்கப் பகுதியில் துளை ஏற்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இது மீட்புப் பணிகளைத் தாமதப்படுத்தி வருகிறது.

சுரங்கத்தின் 80 மீட்டா் வரை மீட்புக் குழுவினா் சென்றுவிட்டனா். ஆனால் இன்னும் 100 மீட்டா் தூரத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. அப்பணி மிகவும் சவால் நிறைந்ததாக உள்ளது’’ என்றாா்.

உறவினா்கள் போராட்டம்: மீட்புப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதாகக் குற்றஞ்சாட்டி, மாயமான பணியாளா்களின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து அதிகாரிகளுடன் அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

போராட்டம் நடத்திய ஒருவா் கூறுகையில், ‘‘பேரிடா் நிகழ்ந்து 4 நாள்கள் ஆகிவிட்டன. போக்குவரத்து துண்டிக்கப்பட்ட கிராமங்களில் இயல்புநிலை திரும்புவதற்கான நடவடிக்கைகள் மட்டுமே துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. காணாமல் போனவா்களை மீட்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com