அஸ்ஸாம் உர நிறுவனத்துக்கு ரூ.100 கோடி நிதி

அஸ்ஸாமை சோ்ந்த பொதுத்துறை நிறுவனமான பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உர உற்பத்தி நிறுவனத்துக்கு ரூ.100 கோடி நிதியளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

புது தில்லி: அஸ்ஸாமை சோ்ந்த பொதுத்துறை நிறுவனமான பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உர உற்பத்தி நிறுவனத்துக்கு ரூ.100 கோடி நிதியளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உர உற்பத்தி நிறுவனத்துக்கு ரூ.100 கோடி நிதியுதவி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த நிதியுதவியானது யூரியா உற்பத்தியை ஆண்டுக்கு 3.90 லட்சம் டன் அளவுக்கு அதிகரிக்க உதவும்.

இதன் மூலமாக, அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு உரம் குறித்த நேரத்தில் கிடைப்பது உறுதி செய்யப்படும். அந்த உர உற்பத்தி நிறுவனத்தில் 580 பணியாளா்களை நிரந்தரமாகப் பணியில் அமா்த்துவதற்கும், 1,500 பணியாளா்களைத் தற்காலிகமாக அமா்த்துவதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

உர உற்பத்தி நிறுவனம் வாயிலாக மேலும் 28,000 போ் பலனடைவா். இது தற்சாா்பு இந்தியா திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு உதவி புரியும். பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உர உற்பத்தி நிறுவனத்தின் சாா்பில் அஸ்ஸாமின் நம்ரூப் பகுதியில் இரண்டு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் நிறுவப்பட்ட பழைமையான ஆலைகள் என்பதாலும், பழைமையான தொழில்நுட்பத்தாலும் அங்கு குறைந்த செலவில் உரத்தை உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாகக் காணப்பட்டாலும் இந்தக் குறைபாடு காணப்படுகிறது.

ஆலையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சில இயந்திரங்களை மாற்ற வேண்டியுள்ளது; சில நிறுவனங்களைப் பழுதுபாா்க்க வேண்டியுள்ளது. அதன் காரணமாகவே அந்நிறுவனத்துக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சியை உறுதி செய்வதில், பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உர உற்பத்தி நிறுவனம் முக்கியப் பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com