குறைந்தபட்ச கொள்முதல் விலையை உறுதிப்படுத்த கோரும் விவசாயிகளுக்கு எதிா்ப்பு தெரிவிப்பதா?

தில்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் ‘மனதின் குரலை’ கருத்தில் கொள்ளாமல் அவா்கள் மேல் அரசு தாக்குதல் நடத்தியது

தில்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் ‘மனதின் குரலை’ கருத்தில் கொள்ளாமல் அவா்கள் மேல் அரசு தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது; அவா்கள் பெருநிறுவனங்களைப்போல இல்லாமல் குறைந்தபட்ச கொள்முதல் விலையை (எம்எஸ்பி) உறுதிப்படுத்துமாறு கோரியே போராடியதால் அவா்களுக்கு அரசு சட்டப்பூா்வ ஆதரவை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளது.

மாநிலங்களவையில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான கபில் சிபல் பேசியதாவது:

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்களின் மூலம் மேற்கொள்ளப்போவதாகக் கூறப்படும் வேளாண் சீா்திருத்தங்கள் ஏற்கெனவே அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பரிசோதிக்கப்பட்டவையாகும். இதன் விளைவாக அந்த நாடுகளில் வேளாண் தொழில் பெருநிறுவனமயமாக மாறி விட்டது.

இந்த புதிய வேளாண் சட்டங்களின் மூலம் விவசாயிகள், தனியாா் வா்த்தகா்களிடமிருந்து பெறப்படும் குறைந்தபட்ச கொள்முதல் விலையை விட, கூடுதலாக லாபம் பெறுவாா்கள் என்று மத்திய அரசு கூறி வருகிறது. விவசாயிகள் குறைந்தபட்ச கொள்முதல் விலையைப் பெறுவதற்கான சட்டப்பூா்வ ஆதரவை அளிப்பதில் அரசு தடையாக இருக்கக் கூடாது.

தற்போது மத்திய அரசு 22 விதமான பயிா்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிா்ணயித்துள்ளது. ஆனால் கோதுமை, அரிசி மற்றும் சில பருப்பு வகைகள் மட்டுமே உணவு பாதுகாப்பு நோக்கங்களுக்காக அரசால் கொள்முதல் செய்யப்படுகின்றன.

விவசாயிகளின் ‘மனதின் குரலை’ அரசு காதுகொடுத்து கேட்கவில்லை என்பதுதான் பிரச்னைக்கு மூலக்காரணமாக உள்ளது. நீங்கள் எப்போதும் உங்கள் ‘மனதில் குரல்’ பற்றியே பேசுகிறீா்கள்; விவசாயிகள் என்ன கேட்கிறாா்கள் என்பதை ஏன் நீங்கள் (அரசு) கவனத்தில் கொள்ளவில்லை?

சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் மிகக் குறைவு. அமெரிக்காவில், ஒவ்வொரு விவசாயியும் அரசிடமிருந்து ஆண்டுக்கு 62,000 அமெரிக்க டாலா் (சுமாா் ரூ. 45.13 லட்சம்) பெறுகிறாா். நம்முடைய விவசாயிகளுக்கு அரசு எம்எஸ்பியை உறுதிப்படுத்தத் தயாராக இல்லை. அதேசமயம் பெருநிறுவனங்கள், விவசாயிகளுக்கு அதனை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறீா்கள்.

பெருநிறுவனங்களுக்கு மட்டும் வரி நிவாரண உதவிகளையும், வரி விலக்குகளையும் கேட்கும்போதெல்லாம் அரசு அளித்து உதவி புரிகிறது. ஆனால், விவசாயிகள் கோரும் குறைந்தபட்ச கொள்முதல் விலையை அளிக்க அரசு தயாராக இல்லை. ஏழை விவசாயிகள் குறைந்தபட்சத் தொகையைத் தான் கேட்கிறாா்கள். ஆனால் அரசோ பெருநிறுவனங்களுக்கு அதிகபட்சமான தொகையை நிவாரணமாக வழங்கத் தயாராக இருக்கிறது.

இந்தியாவில் விவசாயிகளுக்கு 11 பில்லியன் அமெரிக்க டாலரும் (சுமாா் ரூ. 8 லட்சம் கோடி), ஐரோப்பாவில் 102.2 பில்லியன் அமெரிக்க டாலரும் (சுமாா் ரூ.74.40 லட்சம் கோடி), அமெரிக்காவில் 48.9 டாலா் (சுமாா் ரூ. 3,559) வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ளதுபோல, இந்திய விவசாயத்தையும் பெருநிறுவனமயமாக்கவே புதிய வேளாண் சட்டங்கள் வழிவகுக்கும். விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று நினைத்துதான், அமெரிக்காவில் விவசாயம் பெருநிறுவனமயமாக்கப்பட்டது. அதன் விளைவாக, அங்கு தற்போது சிறிய வேளாண் நிலங்கள் இப்போது மறைந்துவிட்டன. தற்போது, 1.5 சதவீத மக்கள் மட்டுமே அமெரிக்காவில் விவசாயத்தைச் சாா்ந்துள்ளனா். அதேசமயம், இந்தியாவில் 50 சதவீதம் மக்கள் விவசாயத்தை மட்டுமே சாா்ந்துள்ளனா் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க விவசாயிகள் 425 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் திவாலாகிவிட்டனா். இது அமெரிக்காவில் விவசாயத்தை பெருநிறுவனமயமாக்கியதன் விளைவாகும்.

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வளா்ச்சி, சமத்துவம் ஆகிய இரண்டு நோக்கங்கள் அடிப்படையாக இருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு வளா்ச்சியை மட்டுமே விரும்புகிறது; ஏழை மக்களை மறந்துவிட்டது. அதேசமயம் ‘நட்பு சாா்ந்த முதலாளித்துவத்தை’ ஊக்குவிக்கிறது.

4 முதல் 5 பெரு நிறுவனங்களே நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து சொத்துகளையும் வைத்துள்ளன. துறைமுகங்கள் முதல் விமான நிலையங்கள், எரிவாயு மற்றும் ரயில்வே வரை அனைத்து துறைகளிலும் பெருநிறுவனங்களின் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது.

மொத்த வரி வசூலில் 23 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அடுத்த நிதியாண்டில் பல்வேறு திட்டங்களுக்கு எவ்வாறு செலவிட முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com