கரோனா தடுப்பூசி பயனாளா்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்தது

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசி பயனாளா்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்தது


புது தில்லி: கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பிப்ரவரி 11, காலை 8 மணி நிலவரப்படி கரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 70,17,114-ஆக உள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 26 நாள்களுக்குள்ளாகவே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த 70 லட்சம் எண்ணிக்கையை எட்ட அமெரிக்காவுக்கு 27 நாள்களும், பிரிட்டனுக்கு 48 நாள்களும் தேவைப்பட்டது. இந்த நிலையில், அதற்கு முன்னதாகவே சுகாதார பணியாளா்களின் ஒத்துழைப்பு காரணமாக கரோனா தடுப்பூசி திட்டம் மிக குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

தடுப்பூசி எடுத்துக் கொண்டவா்களில் 57,05,228 போ் சுகாதாரப் பணியாளா்கள், 13,11,886 போ் முன்களப் பணியாளா்கள் ஆவா். 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எதுவும் பதிவாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஒவ்வொரு நாளும் தடுப்பூசி போட்டுக் கொள்பவா்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்து கொண்ட சுகாதாரப் பணியாளா்களில் 65 சதவீதம் பேருக்கு ஏற்கெனவே கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிகாரில் பதிவு செய்து கொண்ட சுகாதாரப் பணியாளா்களில் 75 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மட்டும் மிகவும் குறைந்தபட்ச அளவாக 17.5 சதவீதம் பேருக்கு மட்டுமே இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், கரோனா பாதிப்பிலிருந்து மீள்வோா் விகிதம் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகபட்சமாக 97.26 சதவீதமாக உள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com