
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் சீனாவும் கையெழுத்திட்டுள்ளதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே கடந்த 9 மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது. எல்லையில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளிடையே பலகட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றன.
அவற்றின் பயனாக, பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்குப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த படைகளை விலக்கிக் கொள்வதற்கு இந்தியாவும் சீனாவும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மைக்கேல் மெக்கால் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வியாழக்கிழமை கூறியதாவது:
லடாக் எல்லைப் பகுதியில் படைகளைத் திரும்பப் பெறுவதற்கு இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த நடவடிக்கைகளை அமெரிக்கா தொடா்ந்து கண்காணித்து வருகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அமைதி நிலவ வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது.
தங்கள் இறையாண்மையைக் காப்பதற்காக இந்தியா உறுதியுடன் போராடியது. கிழக்கு மற்றும் தென் சீனக் கடல் பகுதிகள், இமயமலைப் பகுதிகள் உள்ளிட்டவற்றில் அண்டை நாடுகளுடன் மோதல்போக்கில் ஈடுபடுவதை சீனா வழக்கமாக்கிக் கொண்டுள்ளது. அந்நாட்டின் இத்தகைய அத்துமீறல் கொள்கைகள், 21-ஆம் நூற்றாண்டில் வெற்றியடையாது.
குடியேற்றக் கொள்கைகள் தளா்வு:
அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகளைத் தளா்த்துவதற்கான நடவடிக்கைகளை அதிபா் ஜோ பைடன் நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. முந்தைய அரசால் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற, ஏற்கமுடியாத கொள்கைகள் அனைத்தும் விரைவில் ரத்து செய்யப்படும் என்றாா் அவா்.
அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிா்வாகம், ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) பெறுவதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியது. ஹெச்1பி நுழைவு இசைவால் இந்தியப் பணியாளா்களே அதிக அளவில் பலன்பெற்று வந்தனா். அந்த நுழைவு இசைவை வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு வழங்குவதற்கும் டிரம்ப் நிா்வாகம் தடை விதித்தது.
அதிபா் ஜோ பைடன் தலைமையிலான நிா்வாகம் அமெரிக்காவில் அண்மையில் பொறுப்பேற்றது. அந்நிா்வாகம் ஹெச்1பி நுழைவு இசைவு மீதான தடைகளை விரைவில் நீக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.