
முல்லைப் பெரியாறு அணை
கம்பம்: முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மத்திய தலைமை கண்காணிப்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது 13 மதகுகளை இயக்கிப் பார்த்து ஆய்வு செய்தனர்.
முல்லைப் பெரியாறு அணையில் பருவ காலநிலை மாறுபடும் போது, அணையின் உறுதித்தன்மை பற்றி ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, 3 பேர் கொண்ட மத்திய தலைமை கண்காணிப்புக் குழு மற்றும் துணைக்குழுவினர் ஆய்வு நடத்துவார்கள். இதன்படி, முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி, 13 மதகுகளை இயக்கியும் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை அணையில் ஆய்வுகள் நடத்த மத்திய தலைமை கண்காணிப்புக் குழுத் தலைவரும், மத்திய நீர்வள ஆதார தலைமைப் பொறியாளருமான குல்சன்ராஜ் தலைமையில் தமிழக அரசுத் தரப்பில் , காவேரியாறு தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசுத் தரப்பில் கேரளம் மாநில நீர்ப்பாசனத்துறை செயலாளர் டி.கே.ஜோஸ் ஆகியோர் வந்தனர்.
முல்லைப் பெரியாறு அணையில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்த வந்த மத்திய தலைமை கண்காணிப்புக் குழுவினர்.
இவர்களுடன் மத்திய கண்காணிப்பு துணைக் குழுத் தலைவர் சரவணகுமார், தமிழக பிரதிநிதிகள் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவிப் பொறியாளர் குமார், கேரளம் மாநில பிரதிநிதிகள் பிரசீத், உதவி பொறியாளர் சசி ஆகியோர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இவர்கள் , பிரதான அணை, பேபி அணை, நீர்வழிப்போக்கிகள், சுரங்கப்பகுதி மற்றும் நீர்க்கசிவு அளக்கப்படும் கருவி உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது 13 மதகுகளை இயக்கிப் பார்த்தனர்.