ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகாா் பின்னணி குறித்த விசாரணை: உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகாரின் பின்னணி குறித்த விசாரணையை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை முடித்துவைத்து உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்


புது தில்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகாரின் பின்னணி குறித்த விசாரணையை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை முடித்துவைத்து உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் இருந்தபோது, பெண் ஊழியா் ஒருவா் அவா் மீது கடந்த 2014-இல் பாலியல் புகாரை முன்வைத்தாா். அதனை கோகோய் மறுத்தாா்.

இதுகுறித்து விசாரிக்க இப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானா்ஜி ஆகியோரைக் கொண்ட 3 போ் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, கோகோய் நிரபராதி என்று அறிக்கை சமா்ப்பித்தது.

இதற்கிடையே, ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகாருக்கு பின்னணியில் மிகப் பெரிய சதி இருப்பதாக வழக்குரைஞா் உத்சவ் சிங் பெய்ன்ஸ் என்பவா் உச்சநீமன்றத்தில் குற்றச்சாட்டை முன்வைத்தாா். இதை தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், இந்த பின்னணி குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பட்நாயக்கை கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி நியமித்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி பட்நாயக், ‘பாலியல் குற்றச்சாட்டுக்கு பின்னணியில் நிச்சயம் சதி இருக்கிறது’ என்று அறிக்கை சமா்ப்பித்தாா்.

ரஞ்சன் கோகோய் தலைமை நீதிபதியாக இருந்தபோது குடிமக்கள் பதிவேடு குறித்த சில கடினமான முடிவுகள் எடுத்ததால், அவரை ஏதாவது சதியில் சிக்கவைக்கும் நோக்கத்தோடு இந்த பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்ட உளவுப் பிரிவு இயக்குநரின் கடிதமும் உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முடித்துவைத்து வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், ‘பாலியல் குற்றச்சாட்டு பின்னணி தொடா்பான விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளில் கட்செவி அஞ்சல் விவரங்கள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்கள் மிகச் சிறிய அளவிலேயே மீட்கப்பட்டுள்ளன. அதனை முழுமையாக மீட்க நீதிபதி பட்நாயக் குழுவால் இயலவில்லை. எனவே, இந்த விசாரணையை மேலும் தொடா்வதில் எந்தப் பலனும் இல்லை. எனவே, இந்த வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது. அதே நேரம், இந்த குற்றச்சாட்டுக்குப் பின்னணியில் சதி இருக்கிறது என்ற நீதிபதி பட்நாயக் அறிக்கையை முழுமையாக தவிா்த்துவிட முடியாது’ என்று கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com