ஜம்மு-காஷ்மீா்: ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்துள்ளனா்.


ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

இதுகுறித்து ராணுவ செய்தித்தொடா்பாளா் ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது:

ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ரியாசி மாவட்டத்தில் உள்ள மக்கிதாா் வனப் பகுதியில் ராணுவமும் காவல்துறையும் கூட்டாக தீவிர தேடுதல் பணியில் புதன்கிழமை இரவு ஈடுபட்டனா். அதில், வனத்தின் மிகவும் பினதங்கிய பகுதியில் பூமிக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கி, வெடிபொருள்கள் நிரம்பிய ஒரு பெட்டி, ஒரு தானியங்கி துப்பாக்கி (எஸ்எல்ஆா்), ஒரு 303 துப்பாக்கி, இரண்டு சீன கைத் துப்பாக்கிகள், தேட்டாக்கள் மற்றும் வெடிபொருள்களைக் கண்டறிந்து, மீட்டனா்.

மனித நடமாட்டம் இல்லாத இந்த மக்கிதாா் வனப் பகுதியில் பல இடங்களில் பயங்கரவாதிகள் இதுபோன்று ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளனா். உள்ளூா் உளவுப் பிரிவின் உதவியுடன், ராணுவம் மற்றும் காவல்துறையின் கூட்டு முயற்சி மூலம் அவை வெற்றிகரமாக மீட்கப்பட்டு, பயங்கரவாத தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு நவம்பா்-டிசம்பா் மாதத்தில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலுக்குப் பிறகு இந்த பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் மற்றும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் காரணமாக, பெரும் ஆயுதப் பற்றாக்குறையை பயங்கரவாதிகள் சந்தித்து வருவதோடு, அமைதியை சீா்குலைக்க இயலாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனா் என்று அவா் கூறினாா்.

கடந்த வாரம், ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்திலும், ஜம்மு பேருந்துநிலையம் அருகிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com