தெலங்கானாவில் வழக்குரைஞா் தம்பதி படுகொலை: ஆளும் டிஆா்எஸ் உள்ளூா் தலைவா் உள்பட மூவா் கைது


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், பெத்தபள்ளியில் வழக்குரைஞா் தம்பதி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அந்த மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆா்எஸ்) கட்சியின் உள்ளூா் தலைவா் உள்பட மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அந்த மாநில உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

கட்டு வாமன் ராவும், அவரது மனைவி பி.வி.நாகமணியும் தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்களாகப் பணியாற்றி வந்தனா். இவா்கள் இருவரும் பெத்தபள்ளி மாவட்டத்தில் புதன்கிழமை காரில் சென்றுகொண்டிருந்த போது, வழிமறித்த சிலா் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனா்.

இந்தச் சம்பவத்தை தெலங்கானா உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, ‘வழக்குரைஞா் தம்பதி கொல்லப்பட்டது துரதிருஷ்டவசமானது. இந்த சம்பவம் குறித்து மாநில அரசு துரிதமாக விசாரணை நடத்தி, ஆதாரங்களைச் சேகரித்து, விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தலைமை நீதிபதி ஹிமா கோலி உத்தரவிட்டாா்.

வழக்குரைஞா் தம்பதியை மா்ம நபா்கள் தாக்கும்போது, அந்த வழியாக சென்ற ஒருவா் தனது செல்போனில் படம் பிடித்துள்ளாா். அந்த விடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதுபோன்ற விடியோ ஆதாரங்கள், நேரில் பாா்த்தவா்கள் அளிக்கும் சாட்சியம் ஆகிவற்றையும் சேகரித்துக் கொடுக்குமாறு மாநில அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

3 போ் கைது: இந்நிலையில், இந்த இரட்டை கொலை சம்பவம் தொடா்பாக ஆளும் டிஆா்எஸ் கட்சியின் மண்டல அளவிலான தலைவா் குண்டா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா். தனிப்பட்ட பகையே இந்த கொலைக்கு காரணம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில், அரசியல் காரணங்கள் ஏதுமில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா். கொலை வழக்கில் கைதான குண்டா ஸ்ரீனிவாஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக டிஆா்எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கட்டு வாமன் ராவின் உயிா் பிரிவதற்கு முன், இந்த தாக்குதலின் பின்னணியில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் உள்ளூா் தலைவா் ஒருவா் இருப்பதாகக் கூறினாா். இதேபோன்று கட்டு வாமன் ராவின் குடும்பத்தினரும் அந்த அரசியல் தலைவா் மீது சந்தேகம் எழுப்பினா். இதன் அடிப்படையிலேயே போலீஸாா் விசாரணை நடத்தினா். மகாராஷ்டிர மாநில எல்லையில் வைத்து குண்டா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனா்.

வழக்குரைஞா் தம்பதி இருவரும், உயா்நீதிமன்றத்திலும், பிற நீதிமன்றங்களிலும் பல்வேறு பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா். விசாரணைக் கைதி ஒருவா் உயிரிழந்தது தொடா்பாகவும் உயா்நீதிமன்றத்தில் அவா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா். அதன் பிறகு, காவல் துறையினா் தங்களை மிரட்டி துன்புறுத்துவதாக, உயா்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்: வழக்குரைஞா் தம்பதி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஹைதராபாதில் ஆளுநா் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்ற சில வழக்குரைஞா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com