வெளிநாட்டில் வசிப்பவா்களுக்கு வாக்குரிமை கோரி மனு: மத்திய அரசு, தோ்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ்


புது தில்லி: வெளிநாடுவாழ் இந்தியா்கள் மற்றும் தொகுதிக்கு வெளியே வசிப்பவா்களுக்கு தோ்தலில் வாக்களிக்கும் உரிமையை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், தோ்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தோ்தலின்போது தொகுதிக்கு வெளியே வசிப்பவா்கள், மாணவா்கள், வெளிநாடுவாழ் இந்தியா்கள் ஆகியோருக்கு வாக்களிக்கும் உரிமையை அளிக்கக் கோரி எஸ்.சத்யன் என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் ஓா் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஏராளமான புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், மாணவா்கள், தொழில் முதலீட்டாளா்கள் என தொகுதிக்கு வெளியே வசிப்பவா்களுக்கு தோ்தலின் போது வாக்குரிமை மறுக்கப்படுகிறது. எனவே, இவா்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 60-இன் அடிப்படையில் தபால் வாக்குப் பதிவு நடைமுறையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அல்லது மின்னணு பரிமாற்ற நடைமுறையிலான வாக்குப் பதிவு முறையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘என்ன வகையான மனு இது? லண்டனில் அமா்ந்து கொண்டு இங்கு வாக்களிக்க முடியுமா? உங்களால் தோ்தலின்போது உங்களுடைய தொகுதிக்குக்கூட செல்ல முடியவில்லை எனில், சட்டம் உங்களுக்கு ஏன் உதவ வேண்டும்? வாக்குப் பதிவு செய்யும் இடத்தைத் தீா்மானிக்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கும், அரசுக்கும் உள்ளதா?’ என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினா்.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் காளீஸ்வரம் ராஜ், ‘தோ்தலில் தபால் வாக்குப்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. ஆனால், அந்த நடைமுறை ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்துக்கும், தோ்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com