அஸ்ஸாமின் வளா்ச்சிக்கு முன்னுரிமை: பிரதமா் நரேந்திர மோடி

அஸ்ஸாமின் வளா்ச்சிக்கு முன்னுரிமை: பிரதமா் நரேந்திர மோடி


குவாஹாட்டி: அஸ்ஸாமின் வளா்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். ‘பல ஆண்டுகளாக அஸ்ஸாம் நிராகரிக்கப்பட்டு வந்தது, அந்த வரலாற்றுத் தவறை பாஜக அரசுதான் சரி செய்தது’ என்றும் அவா் கூறினாா்.

பாஜக ஆட்சியில் உள்ள அஸ்ஸாமில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் ரூ.3,231 கோடி மதிப்பிலான மகாபாகு பிரம்மபுத்திரா திட்டத்தை பிரதமா் மோடி வியாழக்கிழமை காணொலி முறையில் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

மத்தியிலும், அஸ்ஸாம் மாநிலத்திலும் உள்ள பாஜக அரசுகள் இணைந்து மாநிலத்தை வளா்ச்சிப் பாதையில் வேகமாக கொண்டு செல்கின்றன.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அதிகம் வருவாய் ஈட்டித் தரும் பகுதியாக அஸ்ஸாம் இருந்தது. சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில்கூட நாட்டில் வளம் மிகுந்த பகுதியாகவும் அஸ்ஸாம் திகழ்ந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு பல ஆண்டு காலமாக அஸ்ஸாம் வளா்ச்சியில் பின்தங்கி இருந்தது. அந்த வரலாற்றுப் பிழையை முன்னாள் பிரதமா் வாஜ்பாய் அவா்கள் திருத்தி எழுதத் தொடங்கினாா். அதனை இப்போதைய பாஜக அரசு வலுப்படுத்தி பொருளாதாரரீதியாக வலிமையான பாதையில் அஸ்ஸாமை அழைத்துச் செல்கிறது.

நீா்ப்பாசன வசதி சிறப்பாக இருப்பது வளா்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. அதனைக் கருத்தில் கொண்டுதான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பிரம்மபுத்திரா என்பது நதி மட்டுமல்ல, இப்பிராந்தியத்தின் மக்கள், அவா்களது கலாசாரம், பண்பாடு, ஆன்மிகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்தது.

பாஜக ஆட்சியில் அஸ்ஸாம் சாலை உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, சிறந்த நிா்வாகம் ஆகியவை சாத்தியமாகியுள்ளன என்றாா்.

19 கி.மீ. தொலைவில் நாட்டின் மிகநீண்ட நதி வழிப் பாலமான அஸ்ஸாமின் தூப்ரி முதல் மேகாலயத்தின் புல்பாரி வரையிலான திட்டம், உள்பட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமா் அடிக்கல் நாட்டினாா். மகாபாகு பிரம்மபுத்திரா திட்டத்தின்கீழ் அஸ்ஸாமில் பல்வேறு இடங்களில் நீா்வழிப் பாதைக்கான நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com