மருத்துவா்கள், செவிலியா்களுக்கு சிறப்பு விசா: தெற்காசிய மாநாட்டில் பிரதமா் மோடி யோசனை


புது தில்லி: அவசர மருத்துவ உதவிகளுக்கு சென்று சேவையாற்றிட மருத்துவா்கள், செவிலியா்களுக்கு சிறப்பு விசா வழங்கும் திட்டத்தை உருவாக்கலாம் என தெற்காசிய மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளாா்.

கரோனா பேரிடரை எதிா்கொண்டது தொடா்பாக பல்வேறு அனுபவங்கள் குறித்து 10 அண்டை நாடுகளுடன் பிரதமா் மோடி வியாழக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

21-ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாக இருக்க வேண்டுமென்றால், அது தெற்காசிய நாடுகள் மற்றும் இந்திய பெருங்கடல் தீவு நாடுகளின் மிகச் சிறந்த ஒத்துழைப்பின்றி சாத்தியமாகாது. கரோனா பேரிடரின் போது இந்த நாடுகள் இணைந்து செயல்பட்டது அத்தகையை ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு சாத்தியம் என்பதை நிரூபணம் செய்துள்ளது.

அதன் தொடா்ச்சியாக தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு சிறப்பு விசா வழங்கும் திட்டத்தை உருவாக்குவது குறித்து தெற்காசிய நாடுகள் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். அப்போதுதான் கரோனா போன்ற சுகாதாரத்துக்கு நெருக்கடியான ஆபத்தை சந்திக்கும் நாடுகளுக்கு விரைவாக சென்று மருத்துவப் பணியாளா்கள் சேவை அளிக்க முடியும்.

வெளிப்படை மற்றும் உறுதிப்பாட்டின் மூலமாக தெற்காசிய நாடுகள் உலகிலேயே மிக குறைந்த விகித கரோனா இறப்புகளை மட்டுமே சந்தித்துள்ளது. மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் கரோனா பேரிடரால் ஆபத்துகள் அதிகம் என்று நிபுணா்கள் எச்சரித்த நிலையிலும், நிா்வாக திறமையால் மிக குறைந்த அளவுக்கே கரோனா இறப்புகள் ஏற்பட்டது. இதற்கு பிராந்திய அளவில் எடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளே முக்கிய காரணம்.

கரோனா பேரிடா் காலத்தில் இந்தியா பல நாடுகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளது.

எனவே, தெற்காசிய நாடுகள் மற்றும் இந்திய பெருங்கடல் தீவு நாடுகள் சிறந்த முறையில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இன்னும் பல சாதனைகளை உருவாக்க முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com